|
ஒரு கிராமத்தில் காலரா கடுமையாகப் பரவியது. நூறு பேர் வரை இறந்து விட்டார்கள். அந்த காலரா ஒரு பெண் தேவதை வடிவெடுத்து, குரூர உருவத்தில், அந்த ஊரை விட்டு புறப்பட்டது. ஒரு வயல்வெளியில், அது நடந்து கொண்டிருந்த போது, எதிரே ஒரு துறவி வந்தார். தேவதையே! உனக்கு ஏன் இந்த கொடிய உருவம் வந்தது? என்றார். நான் உயிர்களைக் கொல்லும் வியாதி தேவதை. அதனால், கடவுள் என்னை இப்படி படைத்து விட்டார் போலும்! என்றது தேவதை. சரி... இப்போது எங்கிருந்து வருகிறாய்? நிலவூர் கிராமத்தில் இருந்து!அங்கே எத்தனை பேர் உன்னால் இறந்தார்கள்?பத்து பேர், இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது, அந்த வயல்வழியே இன்னொரு மனிதன் வந்தான். துறவியே! இந்த தேவதை பொய் சொல்கிறது. இவள் பத்து பேரையா அழித்தாள்! மொத்தம் நூறு பேர் இறந்திருக்கிறார்கள், என்றான். துறவி அதுபற்றி தேவதை யிடம் விளக்கம் கேட்டார். சுவாமி! இந்த மனிதர் சொல்வதில் ஒரு திருத்தம் இருக்கிறது. நான் பத்து பேரைத் தான் கொன்றேன். மற்ற 90 பேரும், நான் வந்திருக்கிறேன் என்ற பயத்தால் தான், இறந்து போனார்கள். பயத்தால் இறந்தவர்களை, என் கணக்கில் எப்படி சேர்க்க முடியும்? என்றது. இதுகேட்டு, துறவி அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார். தேவதையே! நீ சொல்வது சரியே! உலகில், வியாதிகளால் இறப்பதை விட, அது தரும் பயத்தால் இறப்பவர்களே அதிகம். பயத்தை விட்டாலே போதும்! நோய்கள் மனிதர்களை அணுக அஞ்சும். சரி..சரி.. அடுத்து, கடவுள் எங்கே உன்னை அனுப்பப்போகிறார்? என்று கேட்டார். எந்த ஊரை, மக்கள் அசுத்தம் அதிகமாக வைத்து இருக்கிறார்களோ, அவர்களைத் தண்டிக்க என்னை அங்கே அனுப்புவார், என்ற காலரா தேவதை, துறவியிடமிருந்து விடைபெற்றது. |
|
|
|