|
திருமகளும் (லட்சுமி), அவளது அக்கா ஜேஷ்டாதேவியும் (மூதேவி) பூலோகம் வந்தனர். ஒரு கிராமத்தில் உலா வந்த போது, தன்னிடம் பணிக்கு வந்து படுமந்தமாக வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரனை, அவனது எஜமான் மூதேவி! அசமந்தம் மாதிரி என்னடா பண்ணிகிட்டிருக்கே! என கடுமையாகத் திட்டினார். இந்த வார்த்தையைக் கேட்ட ஜேஷ்டாதேவி வருத்தப்பட்டாள். என் அன்புத்தங்கையே! பார்த்தாயா! உலகத்தார் யாரைத் திட்டுவதானாலும், என் பெயரைத் தான் பயன்படுத்துகிறார்கள். இது எனக்கு வருத்தத்தை தருகிறது. இதோ! இந்த பணியாளனை ஒரே நாளில் பணக்காரனாக்கப் போகிறேன். அதன்பின், அவனை யார் திட்ட முடியும்...பார்த்து விடுகிறேன், என்று ஆவேசமாய் சொன்னாள். திருமகளும் சரியென்று தலையாட்டி விட்டாள். அன்று அவன் கண்ணில் படும்படியாக பொற்காசுகள் அடங்கிய மூடையைப் பாதையில் போட்டு வைத்தாள். அதை பணியாளன் எடுத்துச் சென்று, தன் வீட்டுப் பானையில் போட்டு வைத்தான். அவன் மனைவி தங்கள் கஷ்டமெல்லாம் தீர்ந்ததாக நம்பினாள். பக்கத்து வீட்டுக்குப் போய், உழக்கு வாங்கி வந்து எவ்வளவு காசு இருக்கிறது என அளக்க ஆரம்பித்தாள்.
உழக்கு கொடுத்தவளோ சதிகாரி. இவள் எதை அளக்க உழக்கு கேட்கிறாள் என அறிய, உழக்கின் அடியில் புளியை ஒட்டி கொடுத்தாள். அவள் நினைத்தது போலவே, உழக்கு திரும்பி வந்ததும், அதன் அடியில் பொற்காசு ஒட்டியிருப்பதைப் பார்த்தாள். ஆசை அலை மோதியது. தன் கணவனுடன் அந்த வீட்டுக்குள் புகுந்து பொற்காசுகளைத் திருடி வந்து விட்டாள். செல்வத்தை இழந்த பணியாளன் மீண்டும் வேலைக்குப் போனான். அவனுக்கு ஒரு வைர மோதிரம் கிடைக்கும்படியாக செய்தாள் ஜேஷ்டா. அதை அணிந்திருந்த அவன், ஒருமுறை குளத்தில் குளிக்கும் போது, தற்செயலாக கையை உதற தண்ணீருக்குள் விழுந்து விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. சளைக்காத ஜேஷ்டா, அவனுக்கு தங்கமாலை ஒன்று கிடைக்கும்படி செய்தாள். வைரமோதிரம் தண்ணீருக்குள் விழுந்தது போல, இதுவும் விழுந்து விடக்கூடாதே என்ற பயத்தில், கரையில் கழற்றி வைத்து விட்டு குளித்தான். அவன் குளித்து விட்டு திரும்பியதும், கரையில் இருந்த மாலை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டான். தன் நேரத்தை எண்ணி பணியாளன் வருத்தப் பட்டது போல், ஜேஷ்டாவும் வருத்தப்பட்டாள். நடந்ததை தங்கை லட்சுமியிடம் சொன்னாள்.
அவளுக்கு உதவ நினைத்த லட்சுமி, அன்று மாலையில் ஒரே ஒரு ரூபாய் அவன் கண்ணில் படும்படி செய்தாள். அதை எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்தான். அவள் குளத்தில் பிடித்த மீன் வாங்கி வந்தாள். அதைச் சமைக்க அவள் பனையில் இருந்து ஓலை வெட்டி போடும்படி சொன்னாள். அவன் பனையில் ஏறிய சமயத்தில், அவள் மீனை அறுத்தாள். உள்ளே கணவன் தொலைத்த வைர மோதிரம் இருந்தது. அவன் மரத்தில் இருந்த கூட்டை பிரித்த போது, உள்ளே முத்துமாலை இருந்தது. ஏதோ, ஒரு பறவை அதை அங்கே வைத்திருக்க வேண்டும் என புரிந்து கொண்டான். அந்த சமயம் கணவனும், மனைவியும் ஒரே சமயத்தில் பாத்துட்டேன், பாத்துட்டேன் என்று ஒருவருக்கொருவர் தாங்கள் பார்த்ததைக் கூற, அது பொற்காசுகளைத் திருடிச் சென்ற பக்கத்து வீட்டார் காதில் விழுந்தது. நாம் பொற்காசு திருடி ஒளித்து வைத்திருப்பதைத் தான் பார்த்து விட்டார்கள் போலும்! இது ஊர் பஞ்சாயத்துக்குப் போனால் விவகாரமாகி விடும் என பயந்து, அன்றிரவு அவர்கள் வீட்டு வாசலிலேயே பொற்காசு மூடையை வைத்து விட்டு போய்விட்டார்கள். திருமகள் அருள் இருந்தால் போதும்...நம் வாழ்வில் என்ன மாற்றம் எப்போது நிகழும் என சொல்லவே முடியாது. |
|
|
|