|
ரயிலில் இருவர் பயணம் செய்கிறார்கள். ஒருவர், பணக்கார வியாபாரி; மற்றவன் திருடன். தன் பையிலிருந்து கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை எடுத்து, எண்ணுவதற்கு ஆரம்பித்தார் வியாபாரி. திருடனுக்குக் குறுகுறுவென்று இருந்தது. பணத்தில் நாட்டமில்லாத யோக்கியன் போல் எழுந்து, பாத்ரூம் பக்கம் போனான் அந்த பலே திருடன். அவன் திரும்பியதும், வியாபாரி ஒரு நடை டாய்லெட் பக்கம் சென்று வந்தார். வந்தவர், ஒரு புன்னகையோடு திருடனுக்கு குட் நைட் சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டார். அவர் நன்கு தூங்கட்டும் என்று அந்தத் திருடன் காத்திருந்தான். கம்பார்ட்மென்ட்டே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் மெள்ள எழுந்து, அந்த வியாபாரின் பெட்டி, பைகளைக் குடைந்தான் திருடன். பணத்தைக் காணவில்லை. இடுப்பில் முடிந்து வைத்திருக்கிறாரா என்றும் நைஸாகத் தடவி ஆராய்ந்தான். இல்லை. அத்தனை பணமும் எங்கேதான் மாயமாகிப் போனது?
இரவு முழுவதும் திருடனுக்குத் தூக்கம் வரவில்லை. வியாபாரி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தார். விடிந்தது. தூங்கி எழுந்த வியாபாரி, கொட்டக் கொட்டக் கண்விழித்தபடி உட்கார்ந்திருந்த திருடனுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு, அவனது தலையணைக்கு அடியில் கைவிட்டு, பணத்தைச் சுற்றி வைத்திருந்த தனது மஞ்சள் பையை எடுத்துக்கொண்டார். ராத்திரி பூராவும் என் பணத்தைப் பத்திரமாக வைத்திருந்ததற்கு தேங்க்ஸ்! என்றார். இந்தத் திருடனைப் போலத்தான் நாமும், ஆனந்தம் நமக்குள்ளேயே இருப்பது தெரியாமல், வெளியே எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டு இருக்கிறோம்! |
|
|
|