|
பூலோகத்தில் வசித்த கிருஷ்ணதேவன் என்ற அரசனைப் பற்றி தேவலோகத்தில் ஒருநாள் விவாதம் வந்தது. அந்த அரசன் மிகவும் உயர்ந்தவன். குணசீலன். தேவர்களான நமக்குள் கூட பூசல் உருவாகிறது. ஆனால் அவனோ, பிறரிடம் உள்ள நல்லவற்றை மட்டுமே பார்க்கிறான் என்று புகழாரம் சூட்டினான் தேவேந்திரன். ஒரு பூலோகவாசியை தேவேந்திரன் புகழ்ந்தது அங்கிருந்த ஒரு தேவனுக்குப் பிடிக்கவில்லை. உண்மையிலேயே கிருஷ்ணதேவன் நல்லவன்தானா என சோதிக்க பூலோகம் வந்தான். தேரில் அடிபட்டு இறந்துபோன நாயின் வடிவமெடுத்து, அழுகிய உடலுடனும் கோரமான பற்கள் வெளியே தெரியும்படியும் அரசன் வரும் வழியில் படுத்திருந்தான். கிருஷ்ணதேவன் அவ்வழியே வந்தான்.
அட! இந்த நாயின் பற்கள் எவ்வளவு வெண்மையாக, வரிசையாக இருக்கின்றன? இது வாழ்ந்த காலத்தில் இன்னும் அழகாக இருந்திருக்குமே! எனப் புகழ்ந்தான். நாயின் சிதைந்த தோற்றம், அதிலிருந்து வீசிய துர்நாற்றம் பற்றி அவன் பேசவே இல்லை. படுத்திருந்த நாய், சுய ரூபத்தில் எழுந்தது. தன் முன் ஒரு தேவன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட கிருஷ்ணதேவன், தாங்கள் யார்? இறந்த நாயின் வடிவத்தில் ஏன் கிடந்தீர்கள்? என்றான். கிருஷ்ணதேவா! நிஜத்தில் நீ மிகவும் நல்லவன். மற்றவர்களின் குறைகளை விட, அவர்களிடம் உள்ள நிறைகளை யார் காண்கிறார்களோ, அவர்களே இந்த உலகில் பொறாமையற்றும் கவலையற்றும் நிறைவான வாழ்வு நடத்துகிறார்கள். உன்னைப் போன்றவர்கள் பூலோகத்தில் பெருகட்டும்! என்று ஆசிர்வதித்து மறைந்தான் அந்த தேவன். |
|
|
|