|
உன்னை ஒரு மனிதனாகவே ஒருத்தர் நினைக்கலேன்னா உனக்கு எப்படி இருக்கும்? என்று திடுமென்று ஒரு கேள்வியைக் கேட்டான் நண்பன் ஒருவன். என் பதிலை ஒன்றும் அவன் எதிர்பார்த்த மாதிரி தெரியவில்லை. சிறு இடைவெளி விட்டு, அவன் தன் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அதுவும் நீ உன் வேலையைச் சிறப்பாகச் செய்தபோதிலும், உன் மேலதிகாரி உன்னை மதிக்கவில்லையென்றால்..? போதாக்குறைக்கு <உன்னை அவமானப்படுத்துவதுபோல, உனக்குக் கீழே உள்ளவர்களிடம் நேரடியாகச் சென்று, தன் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டால்...? சிறிது நேரம் மவுனத்தில் கழிந்த பிறகு, மெல்ல மெல்ல தன் குமுறலின் பின்னணியை வெளிப்படுத்தினான் அவன். இப்படியெல்லாம் என்னை என் பாஸ் இன்சல்ட் செய்கிறார். இதை எப்படித் தாங்கிக் கொள்வது? வாய்வார்த்தையாக அவர் என்னை எதுவும் கடிந்துகொண்டதில்லை. ஆனால், அவர் நடவடிக்கையெல்லாம் எனக்கு எதிராகவே இருக்கு! என்றான். எனக்கு இதில் வேறொரு கோணம் புலப்பட்டது. நண்பன் இடத்தில் தசரதனை வைத்துப் பார்த்தேன்.
தசரதர் அரசவையில் வீற்றிருந்தார். அப்போது பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் அங்கு வந்தார். மன்னர் எழுந்து நின்று மிகவும் மரியாதையுடன் முனிவருக்குரிய ஆசனத்தை அளித்தார். விஸ்வாமித்திரரும், தசரதன் மற்றும் அயோத்தி மக்கள் குறித்து நலம் விசாரித்தார், முனிவரே, <உங்கள் அருளால் அனைவரும் நலமாக இருக்கிறோம். உங்களுக்கு எந்தத் தேவை ஏற்பட்டாலும், என்னை அணுகலாம்! என்றார் தசரதன் பவ்யமாக. அப்படி ஒரு தேவை ஏற்பட்டதால்தான், இங்கு வந்தேன் என்றார் விஸ்வாமித்திரர். உடனே அதைத் தெரிவியுங்கள். நான் நிறைவேற்றுகிறேன் என்றார் தசரதன், அடுத்து வரப்போவதை அறியாமலே! தசரதா, நான் மாபெரும் யாகம் ஒன்று நடத்துகிறேன். ஆனால், மாரீசன், சுபாகு, தாடகை போன்ற அரக்கர்கள் யாகத் தீயின்மீது இறைச்சி, ரத்தம் போன்றவற்றை வீசி, யாகத்துக்கு இடையூறு செய்கிறார்கள். மாபெரும் தவ வலிமை கொண்ட உங்களிடமா இப்படி விபரீதமாக விளையாடுகிறார்கள்? என்று வியப்புடன் கேட்டார் தசரதன்.
என் வலிமையைச் சேமித்து, யாகத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பதாகச் சபதம் எடுத்திருக்கிறேன். எனவே, சாபங்கள் கொடுப்பதன் மூலம், தன் தவ வலிமையை இழக்க முடியாது. என்னுடன் ராமனை அனுப்பு. அவன் ராட்சஸர்களைக் கொல்வான். என் யாகம் சிறப்பாக நடக்கும் என்றார் விஸ்வாமித்திரர். தசரதன் திடுக்கிட்டார்.கொடும் ராட்சஸர்களை அழிக்க இளம் பிள்ளையை அனுப்புவதா? முனிவரே, ராமன் சிறு பிள்ளை. அரண்மனையைவிட்டு அகலாதவன், அவனால் எப்படி காட்டில் பயணம் செய்து, ராட்சஸர்களைக் கொல்ல முடியும்? நானே வருகிறேன். அந்த அரக்கர்களைக் கொன்று அழித்து, உங்கள் யாகத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் செய்கிறேன் என்றார். விஸ்வாமித்திரர் அதை ஏற்கவில்லை. ராமனே தனக்கு வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார். தசரதனுக்கு இது மிக வேதனையாக இருந்தது. பிறவிக் குருடன் என்றால்கூடப் பரவாயில்லை; பார்வை கிடைத்து, அதை மீண்டும் பறி கொடுத்தால் எவ்வளவு துன்பம் உண்டாகுமோ, அவ்வளவு துயரத்தை அடைந்தான் தசரதன் என்று இதனைக் குறிப்பிடுகிறார் கம்பர்.
மன்னனின் தயக்கத்தைப் பார்த்து விஸ்வாமித்திரர் கடும் கோபம் கொண்டார். தசரதனின் குலகுரு வசிஷ்டர் அவசரமாக மன்னனைச் சமாதானப்படுத்தினார். மன்னா, கொடுத்த வாக்கை மீறாதே! ராமனின் ஆற்றல் பற்றி உனக்குத் தெரியாது. தவிர, கூடவே விஸ்வாமித்திரர் செல்லும்போது, அவனுக்கென்ன குறை? ராமனைத் தனியாக அனுப்பத் தயக்கமாக இருந்தால், அவனோடு லட்சுமணனையும் சேர்த்து அனுப்பு! என்றார். அதன்பின், அரை மனத்தோடு ராம, லட்சுமணர்களை விஸ்வாமித்திரருடன் அனுப்பினார் தசரதன். வசிஷ்டரால் வருங்காலத்தை அனுமானிக்க முடிந்தது. விஸ்வாமித்திரருடன் ராமனை அனுப்புவது, அவனுக்குப் புகழ் சேர்க்கும் என உணர்ந்தார். அதேபோலவே, அரக்கர்களை வதம் செய்து புகழ் கொண்டது மட்டுமல்ல, அகலிகை சாப விமோசனம், சீதையின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவளைத் திருமணம் செய்தது போன்ற பல முக்கியச் சம்பவங்கள் ஸ்ரீராமனின் வாழ்வில் விஸ்வாமித்திரருடன் சென்றபோது நடந்தேறின.
ராமாயணத்தின் இந்தப் பகுதியை நண்பனிடம் பகிர்ந்து கொண்ட பிறகு பேச்சைத் தொடர்ந்தேன்... நல்லா யோசிச்சுப் பாரு! விஸ்வாமித்திரர் ஸ்ரீராமனை காட்டுக்கு அழைத்துச் சென்றது. ஒரு தொலைநோக்குப் பார்வை அதை வசிஷ்டரும் உணர்ந்தார். அதுபோல, உன் மேலதிகாரி ஏன் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் நடந்துகொண்டிருக்கக்கூடாது? உன் திறமையும் ஆற்றலும் அவருக்குத் தெரியாதா என்ன? ஒருவேளை, உனக்கு வேலை பளு அதிகம் என்பதால்கூட, அவர் சில வேலைகளை உனக்குக் கீழ் உள்ளவர்களிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா? சிறு சிறு வேலைகளில் கவனம் செலுத்துவதைவிட, ஆக்கபூர்வமான செயல்களில் நீ அதிகம் ஈடுபடவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர் இவ்வாறு செய்திருக்கலாம். உனக்குக் கீழ் வேலை செய்பவருக்குத் தலைமைப் பண்புகள் இருக்கக்கூடும். அதை உன் பாஸ் உணர்ந்து, அவரை இன்னும் சீரமைக்க எண்ணுகிறாரோ என்னவோ? அப்படி இருந்தாலும், அது ஒன்றும் கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லையே! எனவே, இது குறித்து வீணாக மனசை அலட்டிக் கொள்ள வேண்டாம் என்றேன். நண்பன் முகத்தில் அமைதி திரும்பியது. அங்கிருந்த பைனாகுலர்ஸைப் புன்னகையுடன் சுட்டிக் காட்டினான். அவனுக்கும் தொலைநோக்குப் பார்வை வந்துவிட்டதாம்! |
|
|
|