|
ஒருவன் மாட்டு வண்டியில், கிராமத்து சரக்குகளை ஏற்றி பட்டணத்துக்குப் போவான். சரக்குகளை அங்கே இறக்கி விட்டு, கிடைக்கிற கூலியை வாங்கி வருவான். கிடைத்த கூலி மாடுகளுக்கு தீவனத்துக்கே சரியாகி விட்டதே தவிர, இவனோ அரசாங்கம் தந்த இலவச அரிசியை கஞ்சியாக்கித் தான் குடித்துக் கொண்டிருந்தான். ஒருநாள், துறவி ஒருவர் வந்தார். ""சுவாமி! நான் என்ன தான் உழைத்தாலும், பணம் கையில் மிஞ்சலே! குடும்பத்துடன் கஞ்சிதான் குடிக்கிறோம், என்றான். அவர் அவன் கையைப் பிடித்துப் பார்த்தார். ""தம்பி! உன் ஜாதகம் அப்படி! ஒருவேளை, நீ பணக்காரனாகி விட்டால் செத்துப்போவாய் என்று உன் கைரேகை சொல்கிறது. நீ இப்படியே இரு, என்று சொல்லிவிட்டு போய்விட்டார். தன் விதியை நொந்தவனாய், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்த அவன், ஒருநாள் வரும் வழியில், பெட்டி ஒன்று நடுரோட்டில் கிடப்பதைப் பார்த்தான். பெட்டியை திறந்து பார்த்தால், உள்ளே எக்கச்சக்கமான பணம்.ஒரேநாளில், தான் பணக்காரனாகி விட்டதை நினைத்து மகிழ்ச்சியடைந்த அதேசமயம், துறவி சொன்னது ஞாபகத்துக்கு வரவே, முகம் வாடிப்போய் விட்டது. இருந்தாலும் பெட்டியுடன் ஊருக்கு வந்த அவன், ""நான் பணக்காரன் ஆனால் தானே பிரச்னை! இதை தன்னைப் போன்ற ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்போம், என்று வழங்கினான். ஊரார் அவனை வாழ்த்தினர். அவன் மரணமடைந்த பிறகு, எமதூதர்கள் அவனை சொர்க்கத்தில் கொண்டு சேர்த்தனர். |
|
|
|