|
மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல் விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார். இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில் குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர். அவர்களில் ஒருவர், நாம் அறிஞர் நம்பியிடம் செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார், என்றார். அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர் நம்பியிடம் சென்றனர். எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும், என்று வேண்டினர். சிந்தனையில் ஆழ்ந்த அவர், நாளை அரசவைக்கு வருகிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன், என்றார். மறுநாள் அவர் இரண்டு மூட்டைகளுடன் அரசவைக்கு வந்தார். அரசரை வணங்கிய அவர், அரசே! என் நிலத்தில் இரண்டு இடங்களில் மண் எடுத்தேன். என்ன வியப்பு! இரண்டு மண்ணும் வெவ்வேறு வகையாக உள்ளன, என்றார். ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் இருந்த மண்ணை அரசரிடம் காட்டினார். அதைப் பார்த்த அரசர், இது சாதாரண மண், என்றார்.
அடுத்த மூட்டையை அவிழ்த்தார் அவர். அதில் இனிய மணம் பரவியது. அந்த மண்ணை வாங்கி முகர்ந்து பார்த்தார் அரசர். மண்ணிற்கா இவ்வளவு மணம்? என்னால் நம்ப முடியவில்லையே. அந்த மண்ணும், இந்த மண்ணும் உம் நிலத்தில் எடுத்ததா? என்று வியப்புடன் கேட்டார். அரசே! மணம் மிகுந்த ரோஜாச்செடிகளுடன் இந்த மண் நீண்ட காலம் இருந்தது. ரோஜாவின் இனிய மணம் இந்த மண்ணையும் தழுவிக் கொண்டது. நான் முன்னர் காட்டிய மண் ரோஜாவின் தொடர்பு இல்லாதது. இந்த இரண்டு மண்ணும் நமக்கு நல்ல அறிவுரைச் சொல்கிறது, என்றார் அவர். என்ன அறிவுரை? என்று கேட்டார் அரசர். அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர் தொடர்பினால் நல்லவராகி விடுவார். நீங்களும் அமைச்சர்கள், பெரியவர்களின் அறிவுரையைக் கேளுங்கள். அதன்படி நடந்தால் நாடு வளம் பெறும். உங்கள் புகழ் எங்கும் பரவும், என்றார் அவர். அறிஞரே! உம்மால் நல்லறிவு பெற்றேன். இனி பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்வேன் என்றான் அரசர். சொன்னது போலவே, அவர்கள் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்தார். |
|
|
|