|
நீண்ட காலங்களுக்கு முன், சரவணன் என்ற பெயர் கொண்ட வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஓர் கஞ்சன். தன்னுடைய சொந்த தேவைகளுக்குக் கூட தன் பணத்தை செலவு செய்ய மாட்டான். அவன் தன் வியாபாரத்தில் ஈட்டிய பணத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அதனைத் தங்கக் கட்டிகளாக மாற்றி, ஒரு அறையில் பூட்டி வைத்தான். நாடு முழுவதும் சென்று பொருள் திரட்டினான். அவனிடம் ஏராளமான பணம் இருந்தது. அவன் நல்ல மனிதநேயம் கொண்டவனாக இல்லை. அவன் தன் பணத்தைக் கடனாகவோ அல்லது மக்களுக்கு உதவி செய்யவோ பயன்படுத்தவில்லை. பணத்தை மேன் மேலும் சேர்க்க வேண்டும் என்பதே அவனுடைய ஓரே ஆசையாக இருந்தது. அவன் எங்குச் சென்றாலும் தன் பொருள்களை சமார்த்தியமாக விற்று விடுவான். அவன் ஓரிடத்தில் மிகக் குறைந்த விலைக்குப் பொருள்களை வாங்கி, இன்னொரு இடத்தில் அவற்றை அதிக விலைக்கு விற்று வந்தான். அவன் நேர்மையான வணிகன் அல்லன். எனவே, அவன் ஏராளமான பணத்தைச் சேர்த்தும், திருப்தி இல்லாதவனாக இருந்தான். ஒருநாள் அவன் தன்னிடமிருந்த ஐம்பது ஒட்டகங்கள் மீதும் விற்பனைப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வியாபார நிமித்தமாகப் பயணம் மேற்கொண்டான். மிக நீண்ட தொலைவில் இருந்த நகருக்கு அவன் பயணப்பட்டான். ஆனால், அவன் அந்த நகரத்தை அடைவதற்கு முன்பே, பெரும்பாலான பொருட்களை விற்று விட்டான். எனினும், தன்னுடைய விற்பனையில் அவனுக்கு மகிழ்ச்சியில்லை. எனவே, நகரத்தை அடைந்து, எஞ்சியிருந்த பொருட்களையும் விற்றான். இப்போது அவன் கையில் ஏராளமான பணம் இருந்தது. ஆனால், அவன் கடிகார முள் போல சுழன்று உழைத்ததால் களைத்துப் போனான். வீடு திரும்புவதற்கு முன் சிறிது நேரம் ஓய்வெடுப்பது நல்லது என்று நினைத்தான். எனவே, அவன் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் உணவு விடுதிக்குச் சென்று சில உணவுப் பொருள்களை கொண்டு வரும்படி கட்டளையிட்டான்.
அவன் உணவு விடுதியில் உணவுக்கான ஒரு மேஜையில் காத்திருந்த போது, இன்னொரு மேஜையில் ஒரு சாது அமர்ந் திருப்பதைக் கண்டான். தன்னுடன் இணைந்து உணவு உண்ணும்படி சரவணன் அவரை வேண்டினான். அந்த சாதுவும் அவன் அமர்ந்திருந்த மேஜைக்கு எதிரே வந்து அமர்ந்தார். அவனை ஆசிர்வதித்தார். பிறகு சாது, அவனைப் பார்த்து, நீங்கள் பணக்காரர் போல் தெரிகிறீர்கள். நான் உங்களை இன்னும் மிகப்பெரிய பணக்காரனாக்குவேன், என்றார். அதற்கு சரவணன், என்னை நீங்கள் பணக்காரர் என்று அடையாளம் கண்டு சொன்னீர்களே! அப்போதே நீங்கள் அற்புத ஆற்றல் நிறைந்த சாது என்பதை நான் தெரிந்துக் கொண்டேன், என்றான். அவன் மேலும், அந்தச் சாது சொல்வதை உன்னிப்பாக கேட்கத் தொடங்கினான். சாது தொடர்ந்து பேசினார். ஏராளமான செல்வம் இருக்கும் இடத்தை நான் அறிவேன். அந்த இடத்திற்கு உன்னை நான் அழைத்துச் செல்கிறேன். உன் விருப்பப்படி உனக்கு எவ்வளவு தங்கம் வேண்டுமோ அதை நீ எடுத்துக் கொள்ளலாம், என்றார். நான் அந்த இடத்தை எப்படி அடையாளம் கண்டு கொல்வது? என்று சரவணன் சாதுவிடம் கேட்டான். நான்தான் முன்பே சொன்னேனே அந்த இடத்தை உனக்குக் காட்டுகிறேன் என்று. அந்த இடம் முழுவதும் வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருள்களால் பிரகாசித்துக் கொண்டிருக்கும், என்று சாது கூறினார்.
சாது உண்மையைத் தான் சொல்கிறாரா என்று அவனால் நம்ப முடியவில்லை. எனினும் அவர் கூறுவதை இன்னும் உன்னிப்பாகக் கவனித்தான் சரவணன். சாது மேற்கொண்டு பேசினார். நீ உன் ஐம்பது ஒட்டகங்களின் முதுகில் அந்த விலை உயர்ந்த பொருட்களை ஏற்றலாம். ஆனால், இதில் ஒரு நிபந்தனை. ஐம்பது ஒட்டகங்களின் முதுகில் ஏற்றப்பட்ட விலை உயர்ந்த பொருள்களில் இருபத்தைந்து ஒட்டகங்களில் ஏற்றப்பட்ட பொருள்களை நான் எடுத்துக் கொள்வேன். என்னுடைய நிபந்தனைக்கு நீ கட்டுப் பட்டால், நான் உன்னை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன், என்றார். சரவணனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அந்த சாது கூறியது அவன் காதில் தேன் பாய்ச்சுவது போல் இருந்தது. எனவே அவன் அந்தச் சாதுவின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். அவர்கள் இருவரும் உண்டு முடித்தபின்பு, அந்த அற்புதமான இடத்தை நோக்கிப் பயணமாயினர். அவர்கள் நகரை விட்டு வெளியே வந்து மிக நீண்ட தூரம் பயணம் செய்தனர். அவர்கள் அடர்ந்த காடு, பாலைவனம், வற்றிய ஆறுகள் மற்றும் கொடிய வனவிலங்குகள் ஆகியவற்றையெல்லாம் கடந்து சென்றனர். அவர்களின் பயணம் காட்டின் வழியே தொடர்ந்தது. சிங்கங்கள் மற்றும் புலிகள் வாழும் குகைகளையும், ஆபத்தான நீர்வீழ்ச்சிகளையும் அவர்கள் கடந்தனர். இறுதியாக அவர்கள் ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தனர். சாது சரவணனைப் பார்த்து, இத்துடன் நமது பயணம் நிறைவடைந்தது. நாம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விட்டோம், என்றார். அந்த இடம் மலைகளால் சூழப்பட்டிருந்ததையும், அங்கு எங்குப் பார்த்தாலும் சூரிய ஒளி சுட்டெரிப்பதையும் சரவணன் கவனித்தான். பிறகு சாது ஒரு சிறிய பெட்டியைத் தன் பையிலிருந்து எடுத்தார். அது தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அவர் அதைத் திறந்து, அதிலிருந்து தங்கத் தூளை எடுத்தார். அவர் அந்தத் தூளை நிலத்தில் தூவினார். அடுத்த கணமே, அந்த இடம் முழுவதும் புகையால் சூழப்பட்டது. சிறிது நேரத்தில் புகை மறைந்தது. அங்கே ஒரு குன்றின் வாசல் தோன்றியது. அது குகையைப் போல் இருந்தது.
அந்தக் குகையின் வாசல் பெரிதாக இருந்தது. சாது, சரவணனை அழைத்தார். இருவரும் அந்தக் குகையினுள் நுழைந்தனர். அவர்கள் அதனுள் சிறிது தூரமே நடந்திருப்பர். அந்த இடம் ஒளியால் பிரகாசித்தது. அந்தக் குகையின் சுவர்களில் தங்கம், முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள் பதிக்கப் பட்டிருந்தன. அதனால் அந்தக் குகை முழு வதுமே தகதக என மின்னியது. அதனுள் சிறிது தூரம் நடந்ததுமே சரவணன் திடுக்கிட்டான். அங்கே அவன் ஓர் வித்தியாசமான காட்டைக் கண்டான். அங்கே தங்க மரங்கள், தகதக என மின்னிக் கொண்டிருந்தன. அவற்றின் கிளைகளில் விலை மதிப்பற்ற முத்துக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த நிலம் முழுவதும் வெள்ளி, வைடூரியம் மற்றும் மரகதத்தால் நிரப்பப்பட்டிருந்தது. அந்த இடத்திலுள்ள அலமாரிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பாளங்கள் தனித்தனியாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. வைரமும், மரகதமும் வெள்ளி பதிக்கப்பட்ட தரையில் கொட்டி வைக்கப் பட்டிருந்தன. இவற்றையெல்லாம் கண்டு சரவணன் திகைத்து நின்றான். அதுமட்டுமல்லாமல், அந்த இடத்தில் ஒரு நறுமணமும் வீசியது. பிறகு சாது சரவணனைப் பார்த்து, இவற்றில் இந்தச் செல்வங் களில் உனக்கு எவ்வளவு தேவையோ அவற்றை நீ எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒன்றை நான் நினைவுபடுத்த விரும்பு கிறேன். நீ எவ்வளவு செல்வங்கள் எடுத்துக் கொண்டாலும், அதில் பாதியை எனக்கு நீ தந்து விட வேண்டும். பாதியை நீ வைத்துக் கொள்ளலாம், என்றார். சரவணன் உடனே, விலை உயர்ந்த மாணிக்கங்களை எல்லாம் அள்ளித் தன் சட்டைப் பையில் நிரப்பிக் கொண்டான். மேலும் பல கோணிப்பைகள் நிறைய அந்தச் செல்வங்களை அள்ளினான். சாது அவன் செய்யும் செயலைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்.
சரவணன், தன் பைகள் நிறைய அந்தச் செல்வங்களை எல்லாம் அள்ளி நிரப்பிக் கொண்ட பின்பு, அவர்கள் இருவரும் குகையை விட்டு வெளியே வந்தனர். சரவணன் சாதுவைப் பார்த்து, நீங்கள் ஓர் துறவி. உலக ஆசைகளையெல்லாம் துறந்தவர். நீங்கள் இந்த எல்லையற்ற செல்வங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர் கள்? வெறும் பத்து ஒட்டகங்கள் சுமக்கும் அளவிற்கு உங்களுக்கு நான் செல்வம் தருகிறேன், என்றான். சாது, சரவணன் சொன்னதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், உடனே சரி என்றார். ஆனால், சரவணனுக்கு திருப்தி ஏற்பட வில்லை. அவன் மேலும் சாதுவைப் பார்த்து, இவ்வளவு செல்வங்களை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எனக்குத் தெரிந்து எந்தத் துறவியும் செல்வம் வைத்திருந்ததாகக் கேள்விப்பட்டதில்லை, என்றான். இப்போது சாது சரவணனின் பேச்சுக்கு மறுப்பேதும் கூறாமல் அனைத்துச் செல்வங்களையும் அவனுக்கே தந்து விடுவதாகக் கூறினார். அப்போது சரவணனுக்கு திருப்தி ஏற்படவில்லை. அவன் மேலும் சாதுவைப் பார்த்து தந்திரமாக, மந்திரப் பொடியினால் உங்களுக்கு ஏதும் பயனில்லை என்றே நான் நினைக்கிறேன். இது உங்களிடம் இருந்தால் உங்களுடைய தவ வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும், என்றான். சரவணனின் வார்த்தைகளை கேட்ட சாது புன்னகை புரிந்து, தான் வைத்திருந்த மந்திரத்தூள் இருக்கும் சிறிய பெட்டியையும் சரவணனிடம் கொடுத்துவிட்டார்.
இறுதியாக அந்தச் சாது சரவணனைப் பார்த்து எச்சரிக்கை செய்தார். இதை நீ முறைப்படிப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், இதனால் உனக்கு ஆபத்து ஏற்படும். இந்தப் பொடியை இடது கண்ணில் பூசிக்கொண்டு எதைப் பார்த் தாலும் அது உனக்குத் தங்கமாகவே தெரியும். ஆனால், இதே பவுடரை நீ உன் வலது கண்ணில் பூசிக்கொண்டால் உன் கண்களின் பார்வை போய்விடும், என்றார். சரவணனிடம் அவர் இப்படிக் கூறிவிட்டு உடனே மறைந்து விட்டார். சரவணன் எல்லையற்ற ஆனந்தம் அடைந் தான். அடுத்த கணமே அவன் சாது கொடுத்த பொடியைத் தன் இடது கண்ணில் பூசிக் கொண்டான். என்ன அற்புதம்! அவன் பார்த்த அனைத்துமே அவனுக்குத் தங்கமாகவே தெரிந்தது. அவன் பார்த்த மரம், கல், பாறை, மலர், தரை ஆகிய அனைத்தும் அவன் கண்ணுக்குத் தங்கமாகவே தெரிந்தது. ஆனால், சரவணனின் பேராசை எல்லை கடந்து சென்றது. இந்தப் பொடியை ஒரு கண்ணில் பூசிக்கொண்டு பார்த்தாலே, இவ்வளவு தங்கமாகத் தெரியும் போது, இதனை இரண்டு கண்களிலும், பூசிக்கொண்டு பார்த்தால் உலகமே தனக்குத் தங்கமாகத் தெரியும் என நினைத்தான். அப்போது அவன் இருந்த மகிழ்ச்சியில் சாது சொன்ன எச்சரிக்கையையும் மறந்தான். உடனே அவன் அந்தச் சாது கொடுத்த பொடியைத் தன் வலது கண்ணில் பூசிக் கொண்டான். பாவம்! அடுத்த நிமிடம் அவன் கண்ணொளி பறிபோனது. அவன் பார்வையற்றவன் ஆனான். தன் வாழ்நாள் முழுவதுமே பார்வையற்றவனாகவே வாழ்ந்து இறந்தான். |
|
|
|