Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீதக்காதி!
 
பக்தி கதைகள்
சீதக்காதி!

பல வளங்கள் மிக்கது பாண்டிய நாடு. அந்த நாட்டின் துறைமுக நகரங்களுள் ஒன்று கீழக்கரை. அங்கு திரைகடல் ஓடித் திரவியம் தேடிய வணிக மன்னர் என்னும் மரக்காயர் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர் சீதக்காதி வள்ளல். அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் மல்லாசாகிபு என்ற பெரிய தம்பி மரக்காயருக்கும், சையது அகமது நாச்சியாருக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் சைகு அப்துல் காதிர் என்பதாகும். அது நாளடைவில் செய்தக் காதிறு, செய்தக் காதி, சைத காதி, சீதக்காதி என பலவாறு மருவி வழங்குகிறது. அவர் தமிழ் முஸ்லிம்களுள் தலை சிறந்து விளங்கியவர்; இஸ்லாமிய மதத்தில் ஆழ்ந்த பக்தி கொண்டவர்; தமிழ்ப்புலவர்கள் மீது அவர் மிக்க அன்பு கொண்டவர். அரசர்களுடன் சரியாசனத்தில் அமர்ந்திருந்த பெருமையும் உடையவர். ஒழுக்கம் மிக்கவர். ராமநாதபுரத்தில் அரசு புரிந்த கிழவன் சேதுபதி என்ற விசயரகுநாத தேவருக்கு அமைச்சராயும், உதவும் உத்தம நண்பராகவும் விளங்கினார். காயல்பட்டிணத்தில் தோன்றி புனித பெரியவராய் விளங்கிய சதக்கத்துல்லா வலி என்பவரின் நெருங்கிய நண்பர். அரபி, தமிழ் ஆகிய மொழிகளை நன்கு கற்றவர். அவுரங்கசீப்பின் வேண்டுகோளுக்கு இணங்க வங்காளத்தின் அரசுக்கு சார்பாளராய் இருந்து சில காலம் ஆட்சி செய்து வந்தார். வாணிபம் செய்வதற்கு பெருங்கருவியாக விளங்கும் கப்பலைக் கொண்டு கடல் வாணிபம் செய்து, பெரும் பொருள் ஈட்டிய மரக்கல மன்னர். வாய்மை, தூய்மை, திண்மை, நுண்மை முதலியவற்றை ஒருங்கே பெற்றவர்.
அவர் கீழக்கரையிலிருந்து பெரும் பொருள்களை பாய்மரக் கப்பலில் கொண்டு சென்று இலங்கையில் இறக்கி விட்டு திரும்பும்போது, கனத்திற்காக கப்பலில் மணலை ஏற்றி வந்து, அதன் வழியாக மரகதப் பச்சைக் கல்லைத் தேடி எடுத்து விற்று, செல்வத்துப் பயனே ஈதல் என்னும் கொள்கையின் படி, தாம் ஈட்டிய அச்செல்வத்தையெல்லாம், ஊர் நடுவே உள்ள ஊற்றுப்போல புலவர்க்கும், இரவலர்க்கும் கொடுத்து மகிழ்ந்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் 1713ம் ஆண்டில் கொடிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அதனால், பலர் இறந்தனர். சிலர் மதுரைக்கும், தஞ்சைக் கும் மற்றும் பல ஊர் களுக்கும் ஓடினர். பசியாலும், நோயாலும் பலர் பாதிக்கப்பட்டனர். சிலர் வயிறு ஒட்டிக் கண் குழிந்து வாய் உலர்ந்து வாடினர். சிறு புல் நுனி கூட நிலத்தில் தோன்ற வில்லை. இத்தகைய பஞ்சம் ஏற்படுவதற்கு முன்பு 12படி அரிசியை 12காசுக்கு மக்கள் வாங்கி வந்தனர். எட்டுப்படி கொண்ட ஒரு மரக்கால் அரிசியை ஒரு பணத்திற்கு வாங்கினர். ஆனால், இப்பஞ்ச காலத்திலோ அதே 12படி அரிசியை 4 ரூபாய்க்கு வாங்கும் படியாக ஆகிவிட்டது. அதுகூட கிடைப்பது அரிதாகவும் இருந்தது. இத்தகைய பஞ்ச காலத்தில் சீதக்காதி வள்ளல் பெருவாரியாக பொன்னைச் செலவு செய்தார். பல இடங்களிலிருந்து உணவுப் பொருள்களைக் கொண்டு வந்தார். மக்களுக்கு வாரி வாரி வழங்கினார். வாடிய பயிரில் மழை பொழிவது போல எல்லாருக்கும் எந்த விதத் தடையுமின்றி உண்ண உணவு அளித்துக் காப்பாற்றினார். வள்ளலை எப்போதும் புலவர்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர். பாடிப் பரிசில் பெற்றுச் சென்றனர். ஆனால், ஏழை எளிய மக்கள் மட்டும் அவர் முன் நேரில் சென்று பொருள் கேட்டதில்லை. இது சீதக்காதிக்கு பெரும் மனக்கவலையை அளித்து வந்தது. கீழக்கரை என்னும் ஊரை அடுத்து, ஆமணக்குச் செடி அடர்ந்து வளர்ந்த காடு ஒன்றும் இருந்தது. சீதக்காதி நாள் தோறும் காலை வேளையில் அந்த இடத்துக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் நன்கு வளர்ந்து உயர்ந்து நின்ற ஆமணக்குச் செடி ஒன்றை உற்று நோக்கினார். அதன் இலை அவர் பார்வையில் பட்டது. அது மனிதன் ஒருவன் தன் ஐந்து விரல்களை விரித்து நிற்பது போல் அவர் கண்ணுக்குத் தோன்றியது. உடனே அவர் தமது நெடு நாளைய மனக்கவலையைப் போக்கி கொள்ளுவதற்கு வழி பிறந்து விட்டதாக எண்ணினார். மறுநாள் காலை வழக்கப்படி செல்லும் போது கை நிறைய பொற்காசுகளைக் கொண்டு சென்றார். ஆமணக்குச் செடியின் ஒவ்வொரு இலை மீதும், ஒரு பொற்காசு வீதம் வைத்துக் கொண்டே போனார். அது ஏழை மக்களுக்குத் தெரிந்தது. அந்த நாள் முதல் ஏழை மக்கள் சீதக்காதி செல்லும் நேரத்தை எதிர்பார்த்து நிற்கத் தொடங்கினர். அவர் சென்று திரும்பிய பின் அவர்கள் இலை மீது வைக்கப் பட்ட காசுகளை எடுத்துச் சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar