|
வில்லியனூர் என்னும் ஊரில் நடேசன் என்ற செல்வந்தன் இருந்தான். அவன் ஈவு, இரக்கம் இல்லாத கொடியவனாக இருந்தான். அந்த ஊரில் இருந்த ஏழை மக்கள் காட்டிற்குச் செல்வர். அங்கிருந்து விறகை வெட்டித் தலைச் சுமையாக எடுத்து வந்து விற்பர். அந்த ஏழை மக்கள் மீது நடேசன் பார்வை விழுந்தது. அவர்களிடம் அவன், நீங்கள் கொண்டு வரும் விறகை என்னிடம்தான் விற்க வேண்டும். நான் கொடுக்கும் தொகையை வாங்கிக் கொள்ள வேண்டும். இதை யாராவது மீறினால் அவரை உயிரோடு விட மாட்டேன், என்று மிரட்டினான். பாவம் அவர்கள் என்ன செய்வர்? தாங்கள் சுமந்து வந்த விறகை எல்லாம் அவனிடம் தந்தனர். அவன் கொடுத்த குறைந்த தொகையை வாங்கிக் கொண்டனர். போதுமான வருவாய் இல்லாததால் அவர்கள் பசியாலும், பட்டினியாலும் வாடினர். இந்தப் பாவி எங்கள் வயிற்றில் அடிக்கிறானே... இவன் கொடுமையைக் கேட்பார் யாரும் இல்லையா? என்று அவர்கள் அழுது புலம்பினர். அங்கிருந்த பெரியவர் ஒருவர் அவன் கொடுமையைப் பார்த்து உள்ளம் நொந்தார். அவனிடம் வந்தார், ஏழை மக்களிடம் இப்படி அடித்துப் பிடுங்குகிறாயே... அவர்கள் கதறி அழுவதைப் பார்த்தும் உனக்கு இரக்கம் வரவில்லையா? இனியாவது அவர்களிடம் நேர்மையாக நடந்துக்கொள். வாங்கும் விறகுக்கு உரிய பணத்தைத் தந்துவிடு, என்று அறிவுரை சொன்னார். கோபத்தால் துடித்த அவன், இப்படிப் பேச உமக்கு என்ன துணிச்சல்? வயதில் பெரியவர் என்பதால் உம்மை உயிருடன் விடுகிறேன். இனி இப்படிப் பேசினால் நடப்பதே வேறு, என்று கத்தினான். கொடியவனுக்கு அறிவுரை சொன்னது தன் தவறுதான் என்று நினைத்தார் அவர். தான் தேடிய செல்வத்தை எல்லாம் செலவழித்து அழகிய மாளிகை கட்டினான் நடேசன். கோலாகலமாக அந்த மாளிகைக்குக் குடி வந்தான். அடுத்த வாரமே அந்த மாளிகையில் தீப்பிடித்தது. திகுதிகுவென்று பரவிய தீயில் மாளிகை முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. ஐயோ! என் செல்வம் எல்லாம் போய் விட்டதே. என்ன செய்வேன்? என்று கதறி அழுதான் நடேசன். எத்தனை ஏழை எளிய மக்களை அழ வைத்தான் இவன். அவர்கள் அழுகுரல் தான் நெருப்பாக எழுந்து இவன் செல்வத்தை அழித்தது என்று மக்கள் பேசிக் கொண்டனர். பட்டூஸ்.... இதற்குதான் அநியாயம் செய்யக்கூடாது.
|
|
|
|