|
ஒருசமயம் விஜயநகர பேரரசர், தெனாலிராமன் மற்றும் சில அரசவை உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஓர் அதிகாலையில் ஊர் சுற்றிவரக் கிளம்பினர். சென்று கொண்டே காட்டை அடைந்து விட்டனர். பேச்சின் திசை பலவாறு மாறிக் கடைசியில், உலகில் உயர்வானது எது? என்று திரும்பியது. சிலர் ரத்தினக் கற்கள்தான் உயர்வானவை என்றனர். சிலர் அழகிய மலர்கள்தான் உயர்ந்தவை என்றனர். வேறு சிலர் அழகிய வண்ணத்துப்பூச்சிதான் என்றனர். அரசருக்கு வண்ணத்துப்பூச்சி என்று சொன்னதும் பிடிக்கவில்லை. தெனாலியைத் திரும்பிப் பார்த்தார். அப்போது தெனாலி, என்னைக் கேட்டால் உலகிலேயே உயர்ந்த பொருள் தண்ணீர்தான், என்றார். அதைக் கேட்டு அரசர் உள்பட அனைவரும் சிரித்து விட்டனர். தெனாலியிடம் பதில் இல்லை. வெகு நேரம் சுற்றி திரும்பும் போது சூரியன் சூடாகி விட்டது. கொளுத்தியது வெயில். அரசருக்குத் தாகம் எடுத்தது. மற்றவர்களிடம், அருகில் கொஞ்சம் குடிநீர் கிடைக்குமா என்று பாருங்களேன்... என்றார். தெனாலி ஒருபுறமும், மற்றவர்கள் வேறொரு புறமுமாகத் தண்ணீரைத் தேடிச் சென்றனர். வெகு தூரம் வரையில் நதியோ, குளமோ இல்லை. அரசரின் தாகம் அதிகரித்துக் கொண்டே போயிற்று. அப்போது விசித்திரத் தலைப்பாகை அணிந்த ஒரு கிராமத்தான் தலையில் பெரிய பானையுடன் வந்தான். அரசர் அவனை அருகில் அழைத்துக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும், என்றார்.
அதற்கு அவன், அரசே! என் குழந்தைகளுக்கு நல்ல தாகம். தவிக்கின்றனர். அவர்களுக்காக வெகு தூரத்திலிருந்து எடுத்து வருகிறேன், என்றான். அதற்கு அரசர், இந்தப் பானையைக் கொடுத்து விடு. பதிலுக்கு என்ன வேண்டுமோ கேள்... தருகிறேன்... என்றார். அப்படியா? என்ற கிராமத்தான். சரி... எனக்குப் பதிலுக்குப் பாதி நாட்டைத் தாருங்கள்... என்றான். அரசருக்குக் கோபம் வந்துவிட்டது. ஆனால், தாகத்தால் உயிர் போய்க் கொண்டிருக்கவே, சரி... தண்ணீரைக் கொடு... என்றார். அந்த மனிதன் தண்ணீரை ஊற்றினான். அரசர் குடித்தார். பிறகு தலையை உயர்த்திய போது, தண்ணீர் ஊற்றியவனைக் கண்டு திடுக்கிட்டார். எதிரில் தெனாலிராமன் நின்றிருந்தார். தண்ணீர் பானையைச் சுமந்து வந்த கிராமத்தான் அவரேதான்! சிரித்துக் கொண்டே தெனாலிராமன், என் அதிகப்பிரசங்கித் தனத்துக்கு என்னை மன்னியுங்கள் அரசே! நான் கூறியது சரியாகிவிட்டது பார்த்தீர்களா? என்றார். அதைக் கேட்ட அரசர் சிரித்தவாறு ஆமோதித்தார். அப்போது அமைச்சர் முதலானோர் திரும்பி வந்தனர். எல்லாரும் பானையில் இருந்த தண்ணீரைக் குடித்துத் தாகம் தீர்த்தனர். தெனாலிராமனுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன! |
|
|
|