|
சில சமயங்களில் பேசுவதை விட பேசாமல் இருப்பது நன்மையைத் தந்து விடுகிறது. நியாயத்தைக் கூட, சூழ்நிலை அறிந்து பேசுவது தான் நல்லது. இரண்டு நண்பர்கள் ஒரே நாளில் இறந்தனர். அவர்கள் நிறைய புண்ணியம் செய்திருந்ததால், ஒரே புஷ்பக விமானத்தில் ஏற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செல்லும் வழியில் ஒரு பாம்பு தவளையைப் பிடிப்பதைப் பார்த்த ஒருவர்,""ஏ பாம்பே! அந்த தவளையைக் கொல்வது உனக்கு அநியாயமாகத் தெரியவில்லையா! அதை விட்டுவிடேன், என்றார். கோபமடைந்த பாம்பு,"" அடேய்! தவளையை விழுங்குவது எனக்கு இயற்கையால் வகுக்கப்பட்ட நியதி. அதை மீறியா பேசுகிறாய். நீ நரகத்துக்குப் போ, என சாபமிட்டது. இதைப் பார்த்த இன்னொரு நண்பன் பயந்து போய், ""பாம்பே! நீ செய்வது முற்றிலும் சரி..இயற்கைக்கு உட்பட்டு நடப்பதே முறையானது. நீ தவளையை விழுங்குவது சரிதான், என்றான். உடனே தவளைக்கு கோபம் வந்து விட்டது. ""இரக்கமற்றவனே! என் சாவு உனக்கு சரியாகப் படுகிறதா! ஒருவரை இன்னொருவர் இம்சை செய்வது கண்டு ஆனந்தப்படுபவனாக இருக்கிறாயே! நீ நரகம் போவாய், என சாபமிட்டது. பாவம்...சொர்க்கத்துக்கு செல்ல வேண்டிய இருவருமே நரகத்துக்குப் போய் விட்டார்கள். இயற்கையோடு ஒத்துப்போக வேண்டும் என்பது இப்போதாவது புரிகிறதா! |
|
|
|