|
ஒரு போர்ப்பாசறையில், அன்றைய தினம் நடந்த போர் பற்றி வீரர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது படைத்தலைவர் அங்கு வந்தார். ஒரு வீரன் அவரிடம்""தலைவரே! இன்றைய போரில் வீரர்கள் ஆற்றிய வீரச்செயல்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம், என்றான். ""அப்படியா! இன்று சாதனை புரிந்தவர் யார்? ""தலைவரே! நம் வீரன் மல்லமாறன், எதிரிகளுடன் கடுமையாகப் போராடி கடுமையாக காயமடைந்தான். ஆனாலும், வலியைப் பொருட்படுத்தாமல் போரிட்டான். அவனே சாதனையாளன், என்றான் ஒருவன். ""இது ஒன்றும் பெரிய சாதனையல்ல! வேறு ஏதாவது சொல்லுங்கள், என்ற தலைவரிடம், ""நமது வீரன் குலோத்துங்கன், தன் நண்பனைக் காக்க மார்பில் கத்திக்குத்தை தாங்கி இறந்தான். உயிரைக் கொடுத்ததை விட உயர்ந்தது எதுவாக இருக்க முடியும், என்றான் இன்னொருவன். ""போர் என்றால் காயம், உயிரிழப்பு சகஜம். வேறு ஏதாவது சொல்லுங்கள், என்றார் தலைவர். எல்லாரும் அமைதியாய் இருந்தனர்.
படைத்தலைவரே அதற்கு பதிலளித்தார். ""இன்றைய தினம் நம் வீரன் மார்த்தாண்டன், எதிரி ஒருவனுடன் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தான். அந்த எதிரி படுகாயமடைந்து சாகப்போகிற வேளை! அவன் நினைத்தால் அவனைக் குத்திக் கொன்றிருக்கலாம். ஆனால், அந்த வேளையில் போர் நிறுத்த சங்கு ஒலித்தது. சங்கு ஒலித்தால், அந்தக்கணமே போரை நிறுத்தி விட வேண்டும் என்பது எனது கட்டளை. அதை மனதில் கொண்ட அவன், வாளை கீழே போட்டு விட்டு வெளியேறினான். தலைமைக்கு கட்டுப்பட்ட கூட்டமே கடைசி வரை நிலைத்திருக்கும், என்றான். போர்வீரன், படைத்தலைவனுக்கு கட்டுப்படுவது போல, கடவுளுக்கு பயந்து, அவரது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவனே வாழ்வில் உயர முடியும்.
|
|
|
|