|
தர்மபுர அரசன் மகேந்திரனின் புதல்வி செல்வபிராட்டி. அழகில் தேவதை. தினமும் அதிகாலையே எழும் பழக்கமுள்ளவள். நீராடி, திருநீறு அணிந்து, குங்குமமும் பூவும் சூடி சிவபெருமானை வழிபடுவாள். ஆறு மணிக்குள் பிரார்த்தனை முடிந்து விடும். அந்த குணவதி சிவனிடம்,பெருமானே! நான் உன்னிடம் பெரிய கோரிக்கை ஒன்றை வைக்கப் போகிறேன். எனக்கு வாய்க்கும் கணவன் மிகுந்த குணவானாகவும், தர்மசிந்தனை உள்ளவனாகவும், உன்மேல் பக்தி கொண்டவனாகவும் இருக்க வேண்டும், என்றாள். அவளது கோரிக்கையை சிவன் ஏற்றிருப்பார் போலும்! மணிவண்ணன் என்னும் இளவரசன் அவளுக்கு கணவனாக அமைந்தான். குணத்தில் தங்கம். அவளோடு அதிகாலையே எழுந்து, சிவவழிபாடு செய்வான். தன் அன்புக்கணவன் குறித்து செல்வபிராட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனை கண்ணுக்கும் மேலாக வைத்து, அவன் சொன்னதுசரியோ... தவறோ... அதை அப்படியே ஏற்று பத்தினி தெய்வமாய் வாழ்ந்தாள். ஒருமுறை, அவர்கள் பள்ளியறைக்கு சென்ற போது, வேலைக்காரி அங்குள்ள பஞ்சணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். இருவருமே அதிர்ந்தனர். செல்வப்பிராட்டி அவளை எழுப்பினாள். அவள் திடுக்கிட்டு எழுந்து, அரசரையும், ராணியையும் கண்டு மிரண்டாள். பயத்தில் உடல் நடுங்கியது.
ஏனடி இதில் படுத்தாய்? மணிவண்ணன் அதிகாரமாய் கேட்டான். மகாராஜா! எனக்கு பல பிரச்னைகள். உறங்கி பல நாட்களாகிறது. வீட்டில் இருப்பது ஒரு கிழிந்த பாய். அதிலுள்ள கோரை என் உடலை ஆங்காங்கே கிழிக்கும். தரையில் படுத்தால் உடைந்த மணல்துகள்கள் வருத்தும். மனப்பிரச்னையோடு உடல் பிரச்னையும் சேர்ந்ததால் தூங்கி பல நாட்களாகி விட்டது. இன்று படுக்கையறையை சுத்தம் செய்ய வந்தேன். அசதியில் இதில் சாய்ந்தேன். எப்படியோ தூங்கி விட்டேன். அதற்கு இதன் சொகுசு கூட காரணமாக இருக்கலாம். எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள், ஏற்றுக்கொள்கிறேன், என்றாள். செல்வப்பிராட்டி அவளை அனுப்பி விட்டாள். சற்றுநேரத்தில், யாரோ ஒரு துறவியை காவலர்கள் அடிக்கும் சத்தம் கேட்டது. மன்னன் விசாரித்தான். ராஜா! இவர் தாங்கள் சாப்பிட்டு தூக்கிஎறிந்த பழத்தோலை எடுத்து சாப்பிட்டார். அதனால் அவரை உதைக்கிறோம், என்றனர்.
அப்போது துறவி,ராஜா! பழத்தோல் சாப்பிடும் எங்களுக்கே இவ்வளவு அடி என்றால், இதையெல்லாம் சாப்பிடுமளவு ஆட்சி நடத்தும் உங்களுக்கு எவ்வளவு அடி கிடைக்கப் போகிறதோ! என்று சொல்லி சிரித்தார். மணிவண்ணனுக்கு சுரீர் என்றது. செல்வப்பிராட்டி அவனிடம்,அன்பரே! அவர் சொல்வது உண்மை. கஜானாவில் உறங்கும் பணத்தை ஏழைகளின் தேவைக்கு செலவழிப்போம். உண்ண உணவும், படுக்க பாயும் கூட தராமல் நாம் ஆட்சி நடத்துவதில் பயன் என்ன! அந்த துறவி சொன்னது போல் நமக்கு தெய்வ சந்நிதியில் தண்டனை உறுதி தானே! அதிகாலையே எழுந்து தெய்வத்தை வணங்கினால் போதாது. தெய்வத்துக்குப் பிடித்தமான தர்மச் செயல்களை செய்து மக்களை வாழ வைக்க வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை, என்றாள். அன்று முதல் அவர்கள் மக்களின் நன்மைக்காக திட்டங்களை செயல்படுத்தினர்.
|
|
|
|