|
மன்னர் திருதராஷ்டிரனுக்கு துரோணாசாரியார் மீது சந்தேகம்! அதை அவரிடமே கேட்டு விட்டார். துரோணரே! பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் ஒரே விதத்தில் பாடம் நடத்துவது தானே நல்ல குருவின் இலக்கணம்? உண்மை தான் மன்னா! என்றார் துரோணர். நீங்களும் நல்ல குருவாக விளங்கவேண்டும் என்பது என் ஆசை என்றதும், மன்னர் சுற்றி வளைத்து என்ன சொல்கிறார் என்பதை யூகித்துக் கொண்டார் துரோணர். தனது பிள்ளைகளான கவுரவர்கள், தம்பி பிள்ளைகளான பாண்டவர்களை விட கல்வி, வித்தையில் பின்தங்கி இருந்ததால், மன்னர் இப்படி கேட்கிறார் என்று புரிந்து கொண்டார். மன்னா! வித்தை எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், படிக்கும் ஆர்வத்தைப் பொறுத்து வித்தியாசம் ஏற்படுகிறது, என்று பதிலளித்தார். மறுநாள் காலையில் பாண்டவர்களும், கவுரவர்களும் துரோணர் ஆஸ்ரமத்தில் ஒன்று கூடினர். சீடர்களிடம், இன்று அரிதான ஒரு கலையை நடத்தப் போகிறேன். வனப்பகுதிக்கு சென்று பயில்வோம், என்றார் துரோணர். செல்லும் வழியில் ஆற்றங்கரை மணலில் ஒரு ஸ்லோகத்தை எழுதினார். இந்த ஸ்லோகத்தை ஜெபித்து, பாணத்தை விட்டால் இந்த வனமே நொடியில் சாம்பலாகி விடும், என்று சொல்லி அம்பைக் கையில் எடுத்தார்.
அர்ஜூனா! ஆஸ்ரமம் சென்று என் கமண்டலத்தை எடுத்து வா! என்றார். முக்கியமான பாடம் நடக்கிற வேளையில், நமக்கு ஆசாரியார் வேறு ஏதோ வேலை கொடுக்கிறாரே என்று எண்ணிய அர்ஜுனன், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஆஸ்ரமம் நோக்கி ஓடினான். நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்ததால், நேரம் சென்று கொண்டிருந்தது. அதேநேரம் அவனது மனம், ஆச்சாரியார் சொல்லிக் கொடுத்த அந்த ஸ்லோகத்தையே சுற்றி சுற்றி வந்தது. கமண்டலத்தை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். அதற்குள் அனைவரும் ஆற்றைக் கடந்து வனத்திற்குச் சென்று விட்டனர். அர்ஜூனனும் வேகமாக ஆற்றைக் கடந்து அங்கு வந்த போது, சீடர்களே! ஒரு நல்ல வித்தையை தெரிந்து கொண்டீர்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்! என்று பாடத்தை முடித்து விட்டு துரோணர் மற்றவர்களிடம் கேட்டது அவன் காதில் விழுந்தது. ஒரு நல்ல வித்தையைக் கற்றுக் கொள்ள முடியாமல் போயிற்றே என அர்ஜூனன் வருந்தினான். துரோணரோ அவன் கொண்டு வந்த கமண்டலத்தை வாங்கிக் கொண்டார். அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை.
ஒவ்வொருவராக ஸ்லோகம் சொல்லி பாணம் விடுங்கள்! யார் பாணம் வனத்தை எரிக்கிறது பார்க்கலாம்! என்றார் துரோணர். கவுரவர்களும், மற்ற பாண்டவர்களும் முயற்சித்தனர். ஸ்லோகத்தைச் சொல்வதிலேயே பிழைகள் ஏற்பட்டது. உங்களுக்கு பாடம் நடத்தி வீணாகி விட்டதே! என கடிந்து கொண்டார் துரோணர். அப்போது அர்ஜூனன்,குருவே! தாங்கள் ஆணையிட்டால், நான் முயற்சிக்கிறேன், என்றான். இதென்ன வேடிக்கை! பாடம் கேட்ட எங்களாலேயே முடியவில்லை. உன்னால் எப்படி? என அனைவரும் அவனைக் கேலி செய்தனர். ஆனால், அர்ஜூனன் துரோணர் அனுமதி பெற்று, உறுதியுடன் ஸ்லோகம் ஜெபித்து பாணம் தொடுத்தான். தீ பற்றியது. உன்னால் எப்படி சாதிக்க முடிந்தது அர்ஜுனா? என்றார் துரோணர். குருவே! நீங்கள் எழுதிய ஸ்லோகத்தை படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டேன். கமண்டலத்தை எடுக்கச் செல்லும் வழியில் மனப்பாடம் செய்து கொண்டேன். இப்போது முயற்சித்தேன், சாதித்தேன், என்றான். மகிழ்ச்சியுடன் அவனைத் தழுவிக் கொண்டார் துரோணர். அர்ஜூனா! ஆர்வம் உள்ளவனை வெற்றி தானாக தேடி வரும் என்பதற்கு நீ உதாரணம். எந்த இடத்தில் இருந்தாலும், தொழிலில் கவனம் உள்ளவன் வெற்றி வாகைசூடுவான், என்றார். |
|
|
|