|
திவாகர் கையில் இருந்த பொம்மைக் காரை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதை அவனுடைய மாமா அவன் பிறந்தாள் பரிசாக அவனுக்கு அளித்திருந்தார். திவாகர் மாமா அமெரிக்காவில் பேராசிரியராகப் பணிபுரிபவர். மிகவும் அற்புதமான பொம்மைகள் எல்லாம் அங்கு கிடைக்கும். அவர் அவற்றை எல்லாம் வாங்கி திவாகர் பிறந்தநாளின் போது அவனுக்கு வழங்குவார். இப்போது அவர் திவாகருக்கு பரிசாக வழங்கியிருந்த பொம்மைக்கார் குட்டிக் கரணம் போட்டும், சுவரின் மீது ஏறியும், ஒரே இடத்தில் நின்று வட்டமடித்தும், கண்சிமிட்டியும் செய்யும் வேடிக்கைகளையெல்லாம், இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். அது, சாவி கொடுத்தால் இயங்கும் கார். இத்தனை சிறப்புகளையும் அது கொண்டிருந்ததால், திவாகர் அந்த பொம்மைக்காரைக் கண்ணும், கருத்துமாகப் பார்த்து வந்தான். அந்தக் காரின் மீது சிறு கீறல் கூட விழாமல் அவன் கவனித்து வந்தான். அன்று வழக்கம்போல் அந்த பொம்மைக்காரை வைத்து விளையாடி விட்டு அதனை தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைத்துவிட்டு, அம்மா, நான் பள்ளிக்கூடம் போய் வருகிறேன், என்று தன் அம்மாவிடம் கூறிவிட்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.
அவன் புறப்படும்போது, அம்மா அந்தக் காரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், என்று கூறிவிட்டுச் சென்றான். திவாகருக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுக்கு திவாகரின் பொம்மைக்காரின் மேல் மிகுந்த ஆசை! திவாகர் இதுவரை அந்தக் காரை தன் தங்கைக்கு விளையாடக் கொடுத்ததில்லை. இன்று எப்படியாவது அதை எடுத்து சிறிது நேரம் விளையாடி விட வேண்டும் என்று அவள் நினைத்தாள். அண்ணன் பள்ளிக்கூடம் சென்றதும், அவள் அந்த பொம்மைக்காரை எடுத்தாள். அது கை தவறி கீழே விழுந்து விட்டது. அவ்வளவு தான். அந்தக்காரின் சக்கரங்கள் நாலா புறமும் சுழன்று ஓடின. காரின் ஒருபகுதி வளைந்து போனது. அவள் நடுங்கி விட்டாள். பயந்த படியே இருந்தாள். மாலையில் திவாகர், அந்த பொம்மைக்காரை வைத்து விளையாட உற்சாகத்துடன் வீட்டிற்கு வந்தான். தன்னுடைய பொம்மைக் கார் உடைந்து போயிருப்பதைக் கண்டு கோபம் கொண்டான். தன் தங்கைதான் அதை உடைத்து விட்டாள் என்பதை அறிந்து, அவளிடம் சென்று, உனக்கு அறிவில்லையா? என் காரை ஏன் தொட்டாய்? உனக்கு கண் முகத்தில் இருக்கிறதா? முதுகில் இருக்கிறதா? என்று கோபத்துடன் கத்தினான்.
அவளுடைய அழுகை சத்தத்தை கேட்டு அம்மா சமையலறையிலிருந்து வந்து, டேய் திவாகர் தங்கை உன் காரை தெரியாமல் உடைத்து விட்டாள். அவளை திட்டாதே, என்றாள். அப்போதும் திவாகர் கோபம் அடங்கவில்லை. அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். சிறிது நேரம் தனிமையில் அமர்ந் திருந்தான். அவன் தங்கை வீட்டின் ஒரு ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள். திவாகரின் தாயார் அவன் அருகே வந்து, உன் கோபம் நியாயமானதுதான். ஆனால், அதனை உடனே மறந்துவிட வேண்டும், என்றாள். பிறகு மகளுக்கும் ஆறுதல் கூறினாள். திவாகர் சமாதானமடைந்து, கோபத்தை மறந்து தன் தங்கையிடம் சென்று, என் கண்ணே, அழாதேம்மா. நான் இனிமேல் உன்மேல் கோபப்பட மாட்டேன், என்றான். தங்கையும் அவனைப் பார்த்து, அண்ணா இனி உன் விளையாட்டு பொருட்கள் எதனையும் நான் உடைக்க மாட்டேன், என்றாள். இருவரும் சந்தோஷத்தில் திளைத்தனர். |
|
|
|