|
மது வாழ்க்கையில் எவ்வளவோநிகழ்ச்சிகள் நடக்கின்றன. சிலநிகழ்ச்சிகள், பசு மரத்தாணி போல நன்கு பதிந்து, நம் மனதில் எப்பொழுதும் நிலைத்து நிற்கின்றன.பல வருடங்கள் முன்பு எனக்கு ஒரு மாதுலர் (தாய் மாமன்) இருந்தார்.கல்கத்தாவில் வந்து வேலை பாரு; சாயந்திரம் கல்லூரியில் சேர்ந்து மேலே படிக்கவும்முடியும், என்று என்னை என்னுடைய கிராமத்தில் இருந்து அழைத்து சென்றார்.கல்கத்தா செல்வதற்கு முன்னால், திருப்பதி பாலாஜி தர்சனம் செய்ய நான் குடும்பத்துடன் செல்கிறேன்; நீயும்என்னுடனே வரலாம், என்று சொன்னார்.கிராமத்தை விட்டுவெளி இடம்செல்லாதவன் நான்;வருகிறேன் என்று சொல்ல கசக்குமா என்ன?திருப்பதி பீமா ஹோட்டல் சிற்றுண்டி வாய்க்கு ருசியாக இருந்தது. முதல் முதலாக திருப்பதியில் இருந்துதிருமலாவுக்கு வளைந்து வளைந்து செல்லும், அந்த மலைப்பாதையில் பஸ்சில் பயணம் சென்றது, என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்ச்சி.வேங்கடாசலபதியின் சுப்ரபாத தரிசனம், தோமாலை சேவை, பெரிய கல்யாணஉத்ஸவம், அதற்கு மேலே மிக்கஅமைதியான சூழ்நிலையில் ஏகாந்தசேவை எல்லாம்(இதெல்லாம் அந்தகாலத்தில் நடந்த சம்பவம் என்பதை நான் மறக்காமல் குறிப்பிட வேண்டும்) மாமா குடும்பத்தோடு பாலாஜியை தரிசனம் செய்தது, இன்றும் என் கண் முன்னால் நிற்கின்றன. நாங்கள் தங்கி இருந்த சத்திரத்திற்கு திரும்பி வந்த பொழுது, எனக்கு ஒரு ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. கூடை கூடையாக பெருமாள் பிரசாதம், லட்டு, வடை,புளியோதரை, தயிர்சாதம், அதிரசம் என்றுவகை வகையாக இருந்தன. எனக்கு உடனே நினைவுக்கு வந்ததுரங்காராவ் நடித்த மாயா பஜார் படத்தில் வரும் கல்யாண சமையல் சாதம் காட்சி.
கீழ்திருப்பதிக்கு செல்ல, நாங்கள் எல்லோரும் பஸ்சில் அமர்ந்திருந்த பொழுது, மாமா என் அருகில் வந்து, எதிரில் இருந்த ஒரு ஆள் உயர பலகையைக் காட்டி,என்ன எழுதியிருக்கிறது, படி, என்றார்.எல்லாருக்கும் நன்கு தெரிகிற மாதிரி பெரிய பலகையில்சமஸ்கிருதத்தில் எழுதி இருந்தார்கள். நான் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டதால், எனக்கு படிப்பது சுலபமாக இருந்தது. தைரியமாக, உரக்கப் படித்தேன்....புனர் தர்சன ப்ராப்திரஸ்து (மறுபடியும் பாலாஜியை திருமலையில் வந்து சேவிக்க உனக்கு வாய்ப்பு உண்டாகுக) என்று எழுதி இருக்கிறது என்று சொன்னேன்.மாமா எனக்கு சமஸ்கிருதம் தெரியுமா என்று சோதித்தாரா, அல்லது எனக்கு மறுபடியும் பாலாஜி தரிசனம் கிடைக்க பகவானை வேண்டிக் கொண்டாரா, அல்லது நான் திரும்பத் திரும்ப பாலாஜியை சேவிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று என்னை மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்தாரா என்று, அன்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விக்கு இன்று வரை எனக்கு பதில் கிடைக்க வில்லை.காலம் கடந்தது. மாமாவும் காலம் கடந்து விட்டார். இது வரை நான் எத்தனை தடவை நான் திருப்பதி சென்று இருக்கிறேன். எத்தனை தடவை எனக்கு பாலாஜி தரிசனம் கிட்டி இருக்கிறது என்றால் – கணக்கில் அடங்காதவை என்று தான் பதில் சொல்ல முடியும். நூறுதடவையா அல்லது இரு நூறு தடவை இருக்குமா என்பதை பற்றி இப்பொழுது நாம் பேசவில்லை. மறுபடியும், அங்கே சென்றுபகவானை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் எழுந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஏதாவது சந்தர்ப்பமும் வந்து கொண்டே இருக்கிறது.
என்னுடைய சமீபத்திய வாய்ப்பைப் பற்றி நான் கட்டாயம் கூறவேண்டும்.அமெரிக்காவில் இருக்கும் உன் மாமாவின் கொள்ளுப் பேரனுக்குப் பூணல் போடப்போகிறோம்... நீ தான் அப்பாவுக்கும்,எங்களுக்கும், குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் ஒரு இணைப்பு (டூடிணடு).கட்டாயம் பூணலுக்கு வர வேண்டும், என்று என் மாமா பெண்ணிடம் இருந்து, தொலைபேசியில் அழைப்பு வந்தது.அமெரிக்காவிலோ, அல்லது இங்கேயே மும்பை, டில்லியில் அந்த விழா இருந்தால் பிரயாண டிக்கெட் கிடைக்குமா என்று நான் யோசித்ததை புரிந்து கொண்டு,பூணல் திருமலையில், ஆண்டவன் ஆஸ்ரமத்தில் நடக்க இருக்கிறது, என்று என் மாமா பெண் சொன்னது, காதுக்கு ரொம்ப இனிமையாக இருந்தது. திருப்பதி செல்ல பிரயாண டிக்கெட் சுலபமாகக் கிடைக்கும் என்பதால், கட்டாயம் வருகிறேன் என்று உடனே கூறி விட்டேன்.பூணல் கல்யாணம் நன்றாக நடந்தது. எனக்கும் அந்தஏழுமலையானின் புனர் தர்சனம் கிடைத்தது. கீழ் திருப்பதிக்கு, நாங்கள் எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தோம். அந்த பூணல் போட்டுகொண்ட குழந்தை என் அருகே வந்து, மாமா...அங்கே பெரிசா என்ன எழுதி இருக்குன்னு படியுங்கோ, என்ற உடன், எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கண்களில் ஜலம் கொட்ட ஆரம்பித்தது. என் எண்ணங்கள் பல வருடங்கள் பின்னோக்கி பறந்து சென்றன.மெதுவாக சமாளித்துக்கொண்டு, கண்களைத் துடைத்துக்கொண்டேன். அங்கே எழுதி இருப்பது எழுத்து மூலம் இருக்கும் தெய்வத்தின் குரல் அப்பா... உனக்கு ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழி ஆக்கி விளக்குவது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், ஒன்று மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும். உனக்கு, அந்த திருப்பதி ஆண்டவன், கணக்கற்ற முறை நீ திருமலை வந்து அவனை சேவித்து, ஆசிர்வாதங்கள் பெற்றுக்கொண்டு, இருப்பாய் என்று அவன் (பாலாஜி) உனக்குச் சொல்லுகிறான்....அந்த பாலகனுக்கு நான் சொன்னது புரிந்ததோ, புரியவில்லையோ! என் கண்கள் ஜன்னல் வழியே வானத்தை நோக்கிச் சென்றன.. மாதுலர் (தாய்மாமன்) உடன் பேசிய அந்தகால நினைவுகள் என் மனதில் அடுக்கடுக்காக எழுந்தன.நீ சொல்லுவது சரி என்றுதிருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கும் மாமாவின் முகம் பளிச்சென்றுமின்னியது. மனம் ஒரு மலரைப்போலலேசாக மாறியதை என்னால்உணரமுடிந்தது.
|
|
|
|