|
கந்தனுக்கு ஆறுமாதம் முன்பு தான் திருமணம் நடந்தது. பெண் பார்க்க போன இடத்தில் வள்ளியைப் பற்றி அவளது உறவினர்கள் மாப்பிள்ளை வீட்டாரிடம் புகழ்ந்து பேசினார்கள். அதிர்ந்து பேசாத பெண். குனிந்த தலை நிமிர மாட்டாள். குடும்பத்திற்கு ஏற்ற குணவதி. பக்தி பெட்டகம். முருகபக்தை. விரதங்களை முறையாக அனுஷ்டிப்பவள்,என்று. கந்தனின் பெற்றோரும் பக்த சிரோன்மணிகளே. அவர்கள் தங்கள் மகனை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்த முயன்றனர். அவனோகுடிகாரன். இதையெல்லாம் கண்டு கொள்வதே கிடையாது. தங்கள் குடிகார மகனை வள்ளி திருத்தி விடுவாள் என்ற நம்பிக்கையில், தங்கள் மகனின் தவறான செயல்பாடுகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விட்டனர்.மனைவி முருக பக்தையாக இருக்க, கணவன் மதுவுடன் திரிந்தான். கந்தன் என்ற பெயருக்காக அவனை என்ன ஏதென்று விசாரிக்காமல்,திருமணம் செய்து கொண்ட வள்ளி, எல்லாம் அந்தமுருகனின் செயல். அவன் நினைத்தால் இவர் திருந்த எத்தனை நாளாகிவிடும்? என முருகன் மீது பாரத்தைப் போட்டு விட்டாள்.அவர்களுக்கு குழந்தையும் இல்லை.
இந்த நிலையில் தான், சஷ்டி விரதம் வந்தது. தன் கணவனிடம், இன்று நாம் திருச்செந்தூர் சென்று,செந்திலாதிபதியைவணங்கினால், நமக்கு குழந்தை பிறக்கும். தாங்கள் இன்று ஒரு நாளாவது உங்கள் பாழும் பழக்கங்களை ஒதுக்கி விட்டு என்னோடு வாருங்கள், என்றாள் பணிவுடன்.ஆனால், கந்தனோநீ சாமியாராய் இருப்பது போதாதென்று என்னையும் சாமியாராக்க பார்க்கிறாயா? என்று சொல்லி மறுத்து விட்டான். அவள் அழுதபடியே போய்விட்டாள்.அன்று ஒரு நண்பன்,இரண்டு பாட்டில் கள்ளச்சாராயம நம்மூர் காட்டுப் பண்ணைக்குள் விக்கிறாங்க. அதைக் குடித்தால் இன்றுமுழுவதும் போதையில் மிதக்கலாம், என்று ஆசை காட்டினான்.கந்தனுக்கு நாக்குஊறியது. இருவரும் புறப்பட்டனர். மனம் மகிழ குடித்தனர். சற்று நேரத்தில் இருவருக்கும் மயக்கம் வரும் போல இருந்தது. வாந்திஎடுத்தனர்.
பயந்து போன பண்ணைக்காரன், கந்தனின் வீட்டிற்குதகவல் சொல்லி அனுப்பினான்.வள்ளி அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாள். உள்ளூர் வைத்தியர் சோதித்தார்.அம்மா! இது கொடிய விஷம் கலந்த மது. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் இவர்களை திருச்செந்தூர் பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க. இல்லாட்டி உயிருக்கு ஆபத்து, என்றார்.ஒரு வண்டியில்இருவரையும் ஏற்றிக்கொண்டு திருச்செந்தூருக்கு வேகமாக சென்றாள்.டாக்டர் வர்களைக்குணமாக்கினார்.நல்ல சமயத்திலே கொண்டு வந்தீங்க. செந்தில் முருகன் அருளால் இவங்க இரண்டு பேருக்கும் இனி ஆபத்தில்லை. ஏம்பா... இப்படி கண்டதை குடிக்கலாமா? இனிமேல் இந்த தப்பை செய்யாதீங்க. வந்தது தான் வந்தீங்க! செந்தில்முருகன் சந்நிதிக்குப் போய், இந்த கெட்ட பழக்கங்களை இங்கேயே விட்டுட்டுபோயிடுவோமுனு சொல்லி வணங்கிட்டு வாங்க!என்றார்.அந்த செந்திலாண்டவனே நேரில் சொல்லியது போல் இருந்தது கந்தனுக்கு. முன்செய்த பழிக்குத் துணை முருகா எனும் பாடல் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது, கந்தனின் காதில் விழுந்தது.மனைவியை அன்புடன்தழுவிக் கொண்டான். |
|
|
|