|
பார்வை இல்லாத புலவர் வறுமையில் வாடினார். மன்னரைப் பாடி பரிசு பெற்று வரும்படி அவருடைய மனைவி அனுப்பினாள். அரசவைக்குச் சென்ற புலவர் பாடல் பாடி மன்னரை மகிழ்வித்தார். மன்னன், புலவருக்கு பரிசளிக்கும்படி உத்தரவிட்டான். கருவூலத்தில் கிழிந்த பட்டாடை இருந்தது. அதை பார்த்த கருவூல அதிகாரி, ""கண் தெரியாத புலவருக்கு இதைக் கொடுத்தால் என்ன தெரியவா போகிறது? என்று அலட்சியமாக நினைத்தார். புலவர் பட்டாடையைத் தடவிப் பார்த்த போது, அதில் கிழிசல் இருப்பதை உணர்ந்து கொண்டார். பார்வை இல்லாதவர் என்பதால் மன்னர் அவருக்கு விளக்கும் நோக்கத்துடன், ""புலவரே! இந்த பட்டாடை வெள்ளி ஜரிகையில் நெசவாகி, கொடி வேலைபாடுடன் இருக்கிறது, என்றார். இது தான் சமயம் என புலவரும், ""ஆம் மன்னரே! நானும் பார்த்தேன் என்றார். அதோடு நில்லாமல், ""மன்னா! கொடியில் மலர்கள் பூத்துக் குலுங்குவதோடு பிஞ்சும் கூட விட்டாச்சு, என்றபடியே, கிழிசலைத் தொட்டுக் காண்பித்தார். பட்டு கிழிந்து பிய்ந்து இருப்பதையே "பிஞ்சும் (பிஞ்சு போச்சு) என்றார் புலவர். தவறை உணர்ந்த மன்னர் கருவூல அதிகாரியைக் கண்டித்ததோடு மன்னிப்பும் கேட்டார். புலவரின் அறிவுநுட்பத்தைப் பாராட்டி, புதிய பட்டாடை, பணமுடிப்பு வழங்கி சிறப்பித்தார். |
|
|
|