|
சேரமான் பெருந்தகை என்பவர் அரசகுடும்பத்தில் பிறந்தாலும், பதவி வேண்டாமென சிவனே கதியென சிவபக்தியில் ஆழ்ந்து விட்டார். ஒரு கட்டத்தில், அரசுப் பொறுப்பேற்க ஆளில்லாத நிலையில், அமைச்சர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசராகப் பதவியேற்றார். ஒரு சமயம் யானை மீதேறி,நகர்வலம் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே உடலெங்கும் திருநீறு பூசிய ஒரு மனிதன் வந்தான். முதுகில் ஒரு துணிக்கட்டை சுமந்திருந்தான். மன்னர் யானையில் இருந்து கீழே இறங்கினார். எதிரே வந்த மனிதனை பணிந்து வணங்கினார். ""மன்னர் பெருமானே! என்னைப் போய் வணங்குகிறீர்களே! நான் சலவைத் தொழிலாளி. குளத்துக்குப் போய் என் பணிகளை முடித்து வருகிறேன், என்றார் எதிரே வந்தவர். ""அதனால் என்ன அடியவரே! வெண்ணீறு பூசிய யாராக இருந்தாலும் அவர் சிவனின் அடியவரே! தாங்களோ, உடலெங்கும் நீறு பூசி சிவப்பழமாய் காட்சி தருகிறீர்கள்! தங்களைப் போன்ற சிவனடியார்களை வணங்குவது, சிவனை வணங்குவதையும் விட மேன்மையானது. உலகில் பக்தியாளர் என்ற ஒரே ஜாதி இருக்கிறது. மற்ற பிரிவுகள் எல்லாம் போலியானவையே! என்றார் மன்னர். தொழிலாளி நெகிழ்ந்து போனார். |
|
|
|