|
அயோத்தியில் வசித்த துறவி சரயு நதிக்கரைக்கு வந்தார். அங்கே, ஒரு படகு மறுகரைக்கு கிளம்பத் தயாரானது. அதில், பணக்காரர்கள் மட்டுமே ஏறியிருந்தனர். அவர்கள் முகத்தில் "செல்வந்த அகங்காரம் தெரிந்தது. துறவி, படகோட்டியிடம் தன்னையும் ஏற்றிக்கொள்ளுமாறு கேட்டார். செல்வந்தர்களோ, ""அந்த சாமியாரை ஏற்றாதே, அவன் எங்களுடன் வந்தால், கவுரவக்குறைச்சலாக இருக்கும்< என சத்தமிட்டனர். துறவியோ, ""தம்பி! இருள் வேளை வந்து விட்டது. இனி படகேதும் இங்கிருந்து கிளம்பாது. அக்கரையில் அவசர வேலை இருக்கிறது. என்னை ஏற்றிக்கொள், என்றார். இரக்கப்பட்ட படகோட்டி அவரை ஏற்றி, படகின் ஒரு மூலையில் அமர வைத்தான். படகு புறப்பட்டது. படகில் ஏறியதுமே, துறவி தியானத்தில் ஆழ்ந்து தன்னையே மறந்து போனார். செல்வந்தர்கள் ஆத்திரம் தாளாமல், துறவியைத் திட்டித் தீர்த்தனர். அவர் சமாதிநிலையில் ஆழ்ந்து போனதால், இவர்கள் பேசியது எதுவுமே காதில் விழவில்லை. தாங்கள் திட்டியும், சாமியார் ஏதும் பேசாமல் இருக்கிறாரே என நினைத்த அந்த அஞ்ஞானிகளில் ஒருவன் அவரை கடுமையாக அடித்தான். அடித்த உணர்வே துறவிக்கு தெரியவில்லை. ஆத்திரம் அதிகரிக்கவே, எல்லாருமாக சேர்ந்து, அவரைத் தூக்கினர். ஆற்றில் போட முயற்சித்தனர்.
அந்த நிகழ்வு கூட அவருக்குப் புலப்படவில்லை. படகோட்டியால் ஏதும் செய்ய முடியவில்லை. அவரைக் குண்டு கட்டாகத் தூக்கி தண்ணீரில் எறிய இருந்த வேளையில், கடவுளுக்கே பொறுக்கவில்லை. வானிலிருந்து அசரீரி ஒலித்தது. ""ஆணவம் பிடித்த மூடர்களே! நானே கதியென என்னையே சரணடைந்து தியானத்தில் ஆழ்ந்த என் பக்தருக்கா இடையூறு செய்தீர்கள்! அவரையா கொல்ல முயன்றீர்கள்! நீங்கள் எல்லாரும் படகு கவிழ்ந்து சாகப்போகிறீர்கள். படகோட்டியும், சாமியாரும் மட்டுமே தப்புவார்கள், என்று கேட்டது. படகிலிருந்த பணக்காரர்கள் பதறிப்போய் விட்டார்கள். ""கடவுளே! எங்களை மன்னித்து விடு! தெரியாமல் செய்துவிட்டோம், எனக் கதறினார்கள். ஆனால், படகு தறிகெட்டு ஓட ஆரம்பித்தது. துறவியும், படகோட்டியும் கஷ்டம் ஏதுமின்றி இருந்தார்கள். மற்றவர்கள் படகின் அசைவில், தண்ணீருக்குள் விழுந்து விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது கண்விழித்த துறவி நடந்ததை அறிந்து,"" எம்பெருமானே! இவர்களை மனம் இரங்கி மன்னித்து விடு. பாவம் என அறியாமலேயே இவர்கள் பாவத்தைச் செய்கிறார்கள். அறியாமல் செய்த தவறுக்கு உன் சந்நிதியில் மன்னிப்பு உண்டல்லவா! தயவுசெய்து இவர்களைக் காப்பாற்று, என்று கோரிக்கை வைத்தார். கடவுளும் அவரது கோரிக்கையை ஏற்றார். படகுகரை ஒதுங்கியது. எல்லாரும், துறவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். துறவி அவர்களை ஆசிர்வதித்து கிளம்பினார். |
|
|
|