|
மன்னர் புஷ்யமித்திரர் தன் வீரத்தால் அண்டை நாடுகளை தனதாக்கிக் கொண்டார். வெற்றியைக் கொண்டாட அரண்மனை விழாக்கோலம் பூண்டது. பதஞ்சலி முனிவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் சீடர்களுடன் வந்தார். மனித சஞ்சாரமே இல்லாத வனப்பகுதியில் குருகுலத்தில் வாழ்ந்து பழகிய சீடர்களுக்கு, இந்தக் கொண்டாட்டங்கள் புதுமையாக இருந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக தலைநகரமே அமர்க்களப்பட்டது. ஆனால், தலைமைச் சீடரான சைத்திரனின் மனம் மட்டும், எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. சொல்லப்போனால், அங்கே தங்களை அழைத்து வந்த குருநாதர் மீது வெறுப்பு தான் வந்தது. விழாவுக்குப் பின் விருந்து நடந்தது. முனிவர் மன்னரிடம் விடைபெற்று சீடர்களுடன் புறப்பட்டார். செல்லும் வழியில் சைத்திரன், ""குருவே! புலனடக்கம் பற்றி எங்களுக்கு உபதேசிக்கும் தாங்களே, இங்கு எங்களை அழைத்து வந்தது சரிதானா?, என்றான் கோபமாக. ""சைத்திரா! புலனடக்கம் என்பது காட்டுக்குள் ஒடுங்கிக் கிடப்பதல்ல. கோழைகள் தான் ஓடி ஒளிவார்கள். மனதிற்கு சோதனை வைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை எதிர்கொண்டாலும் அவற்றுக்கு அடிமையாகாமல் இருப்பதே புலனடக்கம். புறவுலக நிகழ்வுகளைப் பார்த்தாலும், அக உலகமாகிய மனதை மாசுபடாமல் தூய்மையாக வைப்பதில் தான் சிறப்பு இருக்கிறது. மனஅடக்கம் தான் எல்லா வற்றிலும் பெரியது, என்றார் தெளிவாக. சைத்திரனுக்கு கோபம் காணாமல் போனது. தெளிவுடன் குருநாதரைப் பின்தொடர்ந்தான்.
|
|
|
|