|
சொர்க்கத்தின் வாசல் மூடப்பட்டிருந்தது. உள்ளே நுழைய முயன்ற ஒருவரை தேவதூதர், நில் அங்கே!, என்று தடுத்து நிறுத்தினார். நான் வைக்கும் பரீட்சையில் வெற்றி பெற்றால் மட்டுமே உள்ளே அனுமதிப்பேன்! என்றார். தலையசைத்த அவரிடம், இதன் உள்ளே செல்லும் அளவுக்கு நீங்கள் என்ன நல்லது செய்தீர்கள் ?, என்றார் தேவதூதர். தான் செய்த நற்செயல்களைப் பட்டியல் இடத் தொடங்கினார். வாரம் தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபடுவேன், என்றார் அவர். அதற்கு தூதர் மூன்று மதிப்பெண் வழங்கினார். குழந்தைகள் கல்வியளிக்கும் நோக்குடன் பள்ளிக்கூடம் நடத்தினேன், என்றார். இப்போது ஐந்துமதிப்பெண் கிடைத்தது. ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தேன், என்றார். அப்படியா!, என்று கேட்ட தூதர் அதற்கும் ஐந்து மதிப்பெண் வழங்கினார்.
இந்த நிலையில் மதிப்பெண் வாங்கினால் முப்பத்தைந்து மதிப்பெண் வாங்கி பாஸ் கூட செய்ய முடியாதே என்ற கவலை வந்துவிட்டது அவருக்கு. சற்று யோசித்தவராய், தன் கைகளைக் குவித்து நின்று கொண்டார். நான் செய்த செயல் ஒவ்வொன்றும் கடவுளால் தான் நடந்தது. சாதாரண மனிதனான என்னால் என்ன செய்ய முடியும்? கடவுளின் கருணையே எனது நற்செயலுக்கும் தீய செயலுக்கும் காரணம். எல்லாம் அவரால் நடந்தது, என்று சொல்லி பட்டியல் இடுவதை நிறுத்திக் கொண்டார். அப்போது சொர்க்கத்தின் வாசல் தானாகவே திறந்து அவருக்கு வழிவிட்டது.
|
|
|
|