|
ஒரு துறவியை இளைஞர் பட்டாளம் சந்தித்தது. ""சுவாமி! கடவுள்...கடவுள் என்கிறீர்களே! அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? எப்படி இருப்பார்? என்றெல்லாம் கேலியாகக் கேட்டார்கள்.துறவி அவர்களிடம், ""ஒரு சட்டியில் பால் கொண்டு வாங்களேன், என்றார். பால் வந்தது. அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது, விரலை உள்ளே விட்டு துழாவினார். சட்டியை சுற்றியசைத்தார். தரையில் வைத்தார். திரும்பவும் உற்றுப்பார்த்தார். இப்படியே, இரண்டு மூன்று முறை அவர் பார்த்துக் கொண்டிருக்கவே, பொறுமையிழந்த இளைஞர்கள், ""சுவாமி! நாங்கள் கடவுள் எங்கே எனக்கேட்டால், நீங்கள் பால் சட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கத்தினர். ""அமைதி...அமைதி... என்ற துறவி, பாலில் வெண்ணெய் இருக்கிறதா என துழாவிப்பார்த்தேன், என்றார்.இளைஞர்கள் கோபத்துடன்,""அட அறிவிலியே! வெண்ணெய் எடுக்க வேண்டுமானால், முதலில் பாலைத் தயிராக்க வேண்டும். அதைக் கடைந்தால் வெண்ணெய் வந்து விட்டுப் போகிறது. இது கூட தெரியாத நீர் கடவுளைப் பற்றி பேச வந்து விட்டீரா? என்றனர்.""தம்பிகளே! கோபம் வேண்டாம்! பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருப்பது உண்மை. ஆனால், அது கண்ணுக்குத் தெரிகிறதா! அதுபோல் தான் கடவுளும். இந்த பிரபஞ்சத்தில் கலந்து நம்மை இயக்குகிறார். கண்ணுக்குத் தெரியமாட்டார், என்றார்.இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கினர். |
|
|
|