|
""மூன்று கேள்விகள்...மூன்றையும் முத்தாக அல்லவா கேட்டுள்ளார் அரசர் அநபாய சோழர்... எனக்கு இதன் பதில் தெரியும்.. மகன் அருண்மொழித்தேவரின் பதில் தந்தையை வியப்பில் ஆழ்த்தியது. முந்தைய நாள் அரசன் அநபாயன், அந்தப் பெரியவரை அழைத்தான். ""உலகை விட பெரியது எது? கடலை விட பரந்தது எது? மலையை விட உயர்ந்தது எது?.. இவற்றுக்கு பதிலளிக்க வேண்டும், என்றான். பெரியவர் வீட்டுக்கு வந்து நூல்களைப் புரட்டினார். பதில் கிடைக்கவில்லை. தந்தையின் குழப்பத்தை அறிந்த மகன், ""அப்பா! இதற்கா கவலை! கேளுங்கள் பதிலை! காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற்பெரிது மடமடவென குறள் பொழிந்தான். பெரியவர் திகைத்துப் போனார். இவற்றின் பொருள் என்ன? நேரத்திற்கு செய்த உதவி, உலகை விட பெரியது. கொள்கையில் திடமாக இருப்பது மலையை விட உயர்ந்தது. பயன்கருதாத உதவி கடலை விட பரந்தது. அரசனிடம் மகன் எழுதித்தந்த ஓலையை ஒப்படைத்தார் பெரியவர். கையெழுத்தில் வித்தியாசமிருப்பதைக் கண்டுபிடித்த மன்னன், அதுபற்றி பெரியவரிடம் கேட்டான். பெரியவர் நடந்ததைச் சொன்னார். உடனே பல்லக்கை அனுப்பி, இளைஞனை அழைத்து வந்தான் மன்னன். அவனையே தனது முதல் அமைச்சராக்கினான். அந்த இளைஞர் தான், பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார்.
|
|
|
|