|
ரிபுமகரிஷிக்கு நிதாகர் என்ற சீடர். இவருக்கு ஆத்ம ஞானம் அடைய வேண்டும் என்பது விருப்பம். ஆத்மா என்பது அணு போன்றது. அதற்கு உறுப்பெல்லாம் கிடையாது. பிராமணன், வைஸ்யன், சூத்திரன் என்பதெல்லாம் உடலைப் பொறுத்த விஷயம். ஆத்மாவுக்கு இந்தப் பாகுபாடு கிடையாது. தற்போது சூத்திரனாக இருப்பவன், அவன் செய்யும் வினைகளுக்கேற்ப பிராமணனாகவும் பிறக்கலாம், க்ஷத்திரியனாகவும் (அரசன்) மாறலாம், கீழ்நிலையான மிருகமாகவும் பிறக்கலாம், என்று உபதேசித்தார் ரிஷி. நிதாகருக்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது. ஆயிரம் வருஷம் இதுபற்றி சிந்தித்தார். ஒருநாள் காட்டில் தர்ப்பை அறுத்து வந்தார். அவ்வூர் ராஜா யானை மீது அமர்ந்து ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது மகரிஷி ரிபு வந்தார். நீண்டகாலம் ஆகிவிட்டதால் ரிபுவை, நிதாகருக்கு அடையாளம் தெரியவில்லை. யாரோ சாமியார் என நினைத்து விட்டார். ஏன் இங்கே நிற்கிறாய்? ரிபு கேட்டார். எதிரே ராஜாவின் யானை ஊர்வலம் வருகிறது? அதனால் ஒதுங்கி நிற்கிறேன்,. ராஜாவா யார் அது? யானை மேல் உட்கார்ந்திருக்கிறாரே... அவர் தான். யானையா...அப்படியானால் என்ன? மகரிஷியாக இருக்கீறீர்! இது கூட உமக்கு தெரியாதா! கருப்பாக நீண்டு வளைந்த கையுடன் குண்டாக இருக்கிறதே ராஜாவுக்கு கீழே! அதுதான்!.
அப்படியா! ராஜா மேலே...யானை கீழே.. என்றீரே! மேலே என்றால் என்ன? கீழே என்றால் என்ன?. ரிபு இப்படி கேட்டாரோ இல்லையோ...நிதாகர் டென்ஷனாகி விட்டார். மகரிஷியைக் கீழே தள்ளினார். அவர் மீது இரண்டு பக்கமும் காலைத் தூக்கிப் போட்டார். இப்போது புரியுதா? நீர் கீழே...நான் மேலே! அப்போதும் ரிபு அமைதியாக கேட்டார். நீர் என்பது யார்? நான் என்பவர் யார்? இப்போது தான் நிதாகர் சிந்தித்தார். இவர் சாதாரண ஆளல்ல! யாரோ மகான். ஒரே கேள்வியில் மடக்கி விட்டாரே! கோபமே வரவில்லையே! இவர் மாபெரும் தபஸ்வி, என நினைத்தவரின் முகத்தை உற்றுக்கவனித்த நிதாகர், அவர் தனது குரு என்பதை தெரிந்து கொண்டு, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நிதாகா! நான் உன் குரு என்பதை ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால் மறந்து விட்டாய். இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஆத்மஞானம் என்றால் என்ன என்பது பற்றி அறியாமல் இருந்து விட்டாயே! நான் யார்? என்ற கேள்வியை திரும்பத்திரும்ப உன்னிடமே கேள். உன் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் எல்லா உறவுகளுமே மாயை. இவை உன்னிடம் சில காலம் இருந்து விட்டு போய் விடும். ஏன்... நீயும் மறைந்து போவாய். இந்த உண்மையை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார். நாம் இறைவனிடம் இருந்து வந்தவர்கள். அவன் மட்டுமே நமக்கு நிரந்தர சொந்தம் என்ற ஆத்மஞானம் கைகூடும், என்றார். நிதாகருக்கு சிந்தனையில் தெளிவு பிறந்தது. |
|
|
|