|
கோலாகலர் என்ற புலவரது கல்வியறிவுக்கு அளவில்லை. யார் என்ன கேட்டாலும் பதிலளிப்பார். இதனால், அவரை தற்பெருமை ஆட்டிப்படைத்தது. இவரது திறமையறிந்த பாண்டியமன்னன் தனது அரசவை புலவராக்கிக் கொண்டான். பலநாடுகளைச் சேர்ந்த புலவர்களை அவருடன் வாதிடும் வகையில் போட்டி வைத்தான். கோலாகலரிடம் எல்லாரும் தோற்றனர். இதைப் பாராட்டிய மன்னன், அவரை வாதத்திறமையில் ஜெயிக்க முடியாத உள்ளூர் புலவர்கள் அவருக்கு கப்பம் கட்ட வேண்டுமென உத்தரவிட்டான். கோலாகலரிடம் ஆண்டுதோறும் கப்பப்பணம் குவிந்தது. அவர் பெரும் பணக்காரரானார். மாபாடிய பட்டர் என்ற புலவர் மட்டும் இரண்டு ஆண்டுகளாகக் கப்பம் கட்டவில்லை. பணத்தை வசூலிக்க சீடனை அனுப்பினார் கோலாகலர். அப்போது, மாபாடிய பட்டர் குருகுலத்தில் இல்லை. அவரது சீடரும், வைணவ ஆச்சாரியார் நாதமுனிகளின் கொள்ளுப்பேரனுமான யமுனைத் துறைவன் என்ற 12 வயது சிறுவன் மட்டுமே இருந்தார். சீடன் அவரிடம், ""ஏய்! உன் குருவை எங்கே! என் குருநாதர் கோலாகலருக்கு கப்பம் கட்டி வருஷம் இரண்டாச்சு! பதில் சொல், என்று அதட்டலாகக் கேட்டான். ""எதற்கு கப்பம்? ""எம் குருவை வாதில் வெல்ல முடியாதவர்கள் அவருக்கு கப்பமளிக்க வேண்டும் என்பது அரசகட்டளை. இது உனக்கு தெரியாதா! ""அப்படியா! மாபாடிய பட்டரின் சீடர்களிலேயே அறிவில் சிறியவன் நான்தான். நான் உன் குருவுடன் வாதாட வருகிறேன். தயாராக இருக்கச்சொல்,. சீடன் கோபத்துடன் போய்விட்டான். ""ஒரு பொடியன் என்னுடன் வாதாட வருகிறானா! வரட்டும், என கொப்பளித்த கோலாகலர் அரசவைக்கு வந்தார். யமுனைத்துறைவனும் வந்து சேர்ந்தார். சிறுவன் ஒருவன் பெரும்புலவரை எதிர்த்து வாதாடுகிறார் என்றால் கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்! பாண்டிய மக்கள் குவிந்தனர். கோலாகலர் கேள்விகளை அள்ளி வீசினார். யமுனைத்துறைவன் பதில்களைக் கடகடவெனச் சொன்னார். கேள்விகளைக் கடினமாக்கினார் கோலாகலர். எல்லாவற்றுக்கும் தெளிவான பதில் வந்தது. ""சரி..என் முறை முடிந்தது. இனி உன் கேள்விகளைக் கேள், என்றார் கோலாகலர். ""உ<ம்மைப் போல நான் நூறு கேள்விகளைக் கேட்கப்போவதில்லை. மூன்றே கேள்வி... என்றவர் கேள்விகளை விளாசினார். ""உன் தாய் புத்திரர்களைப் பெற்றவள், இந்நாட்டு அரசன் தர்மம் தவறாதவன், இந்நாட்டு அரசி பத்தினி...இந்த மூன்றும் சரியல்ல என்று நான் சொல்கிறேன். நீர் இதை மறுக்க வேண்டும்,. இதைக் கேட்டதும் கோலாகலர் மட்டுமல்ல, அரசன், அரசி, மக்கள் எல்லாருமே மூச்சடைத்து நின்று விட்டனர். ""இதை எப்படி மறுப்பது! என் தாய்க்கு நான் ஒரு பிள்ளை. அவள் எப்படி மலடியாவாள்? எங்கள் மன்னர் செங்கோல் ஏந்தியவர். மக்களே அதற்கு சாட்சி. இந்நாட்டு அரசியைப் போல் பதிவிரதை யார் உண்டு! அவரை ஒழுக்கம் கெட்டவர் என சொல்லச் சொல்கிறாயா?...முடியாது. எங்கே! நீ இந்த கேள்விகளை நீயே மறுத்துப் பேசு பார்க்கலாம்! என்றார் கோலாகலர். யமுனைத்துறைவன் சிரித்தார். ""கோலாகலரே! "ஒரு பிள்ளை பெற்றவள் மலடி என்று தத்துவநூல்கள் கூறுகின்றன. நீர் உம் தாய்க்கு ஒரே பிள்ளை. எனவே அவள் புத்திரப்பேறு இல்லாதவளுக்கே சமம். மக்கள் செய்யும் பாவபுண்ணியத்தில் ஒரு பங்கு அரசனைச் சேர்கிறது. இப்போது கலியுகம் என்பதால் மக்கள் பாவமே அதிகம் செய்கின்றனர். எனவே அரசன் பாவியாகிறான். ஒரு அரசன் தேவர்களான இந்திரன், வருணன் உள்ளிட்ட ஆறு தேவர்களின் அம்சம் கொண்டு விளங்குகிறான் என்கிறது சாஸ்திரம். எனவே, அவன் ஒருவனாயினும், அவனுள் இருக்கும் தேவர்களுக்கும் அரசி மனைவியாகிறாள். எனவே அவள் பதிவிரதை அல்ல. கூட்டம் கை தட்டியது. கோலாகலர் தலைகுனிந்தார்
|
|
|
|