|
குரு ஒருவர், தன் சீடனைப் பார்த்து நீ உருவக் கடவுளை நம்புகிறாயா? அல்லது அருவக் கடவுளை நம்புகிறாயா? என்று கேட்டார். சீடனின் உணர்வு நிலையினை உயர்த்த வேண்டும் என்பதற்காக குரு இந்தக் கேள்வியைக் கேட்டார். குருதேவர் கேள்வி கேட்டதுமே உணர்ச்சி வசப்பட்ட சீடர் குருவே, நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கும்போது உருவக் கடவுள் என்ற வார்த்தையைச் சொன்னதும் என் நெஞ்சில் உங்கள் உருவம் பிரகாசமாகத் தோன்றியது. அருவக் கடவுள் என்று சொல்லும்போது, என் நெஞ்சில் இருந்த உங்கள் உருவம் ஜோதிர்மயமான உணர்வுக் கடலில் கரைந்து போனது என்றார்.
இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த குரு, பகவான் ராமகிருஷ்ணர். அவரது சீடராக பதில் கூறியவர், பகவானின் நேரடி சிஷ்யரான சுவாமி விஞ்ஞானந்தர். இதுதான் குருபக்தி. இப்படி இருந்தால்தான் நீங்கள் கடவுளை உணர முடியும். ஒரு முறை பகவான் ராமகிருஷ்ணர், இன்னொரு சீடரான ஹரி பிரசன்னரிடம், தம்பி, ஒரு தீக்குச்சி எரிகிறது என்று வைத்துக் கொள். அதன் மீது ஒரு பெரிய மரக்கட்டையை வேகமாகப் போட்டால் என்ன ஆகும்? என்றார். தீக்குச்சி அணைந்து விடும். என்றார் சீடர். சரி. ஒரு பெரிய காடே பற்றி எரிகிறது என்று வைத்துக் கொள். அப்போது அதில் ஒரு வாழை மட்டையைப் போட்டால் என்ன ஆகும்? ஈரமான அந்த வாழை மட்டையும் அந்தக் காட்டுத் தீயில் தானாக எரிந்து விடும்.
குருதேவர் புன்னகைத்தார். சரியே. அப்படித்தான் ஆன்மிக தாகம் ஒருவரிடம் சிறிய அளவில் மலர்ந்திருக்கும்போது உணவு விஷயத்தில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குரு, இஷ்ட தெய்வம் பற்றிய விதிமுறைகளை மதிக்க வேண்டும். அதோடு நடைமுறை, பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் அவனது ஆன்மிக தாகம் மறைந்துவிடும். மாறாக உன் இதயத்தில் இறை ஒளி தீப்பிழம்பாக ஒளிரும்போது குரு, இஷ்ட தெய்வ வேற்றுமை மறைந்துவிடும், அப்போது பாரம்பர்ய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் கூட இருக்காது என்றார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
|
|
|
|