|
குரு ஒருவர் சீடனோடு நதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, நகைப் பெட்டி ஒன்று மிதந்துவந்தது. சீடன் அதைப் பிடித்து திறந்து பார்த்த போது, உள்ளே விலையுயர்ந்த மரகதக்கல் ஒன்று இருந்தது. உடனே சீடன் அதை எடுத்து குருவிடம் கொடுத்தான். அதைக் கையால் கூடத் தொடாத குரு, அதை அதன் போக்கிலேயே விட்டு விடு என்று கூறிவிட்டார். ஏமாற்றமடைந்த சீடனும் அப்படியே விட்டுவிட்டான். இரண்டு நாட்கள் கழித்து மூதாட்டி ஒருவர், சுவாமி... நேற்று இந்த நகைப்பெட்டி நதியில் மிதந்து வந்தது. யாருடையது எனத் தெரியவில்லை. உரியவரிடம் இதை சேர்ப்பித்து விடுங்கள் எனக்கூறி, அவரிடம் கொடுத்தார். இந்தப் பெட்டியை பற்றியே சீடன் இரண்டு நாட்கள் விவாதித்து, தன்னை உயர்வாகப் பேசி வருவதை நினைத்துப் பார்த்தார் குரு. பின் அமைதியாக சீடனிடம் திரும்பி, பற்றற்ற வாழ்க்கையில் இருக்கும் நீயும் நானும் இந்தப் பெட்டியை நதியில் விட்டது பெரியதா? பற்று வாழ்வில் இருந்தும் அதை உரியவரிடம் சேர்க்க ஆசைப்படும் இந்த மூதாட்டியின் செய்கை பெரியதா? எனக் கேட்டார். இதைக் கேட்ட சீடன் தன் தவறை உணர்ந்து வருந்தினான்.
|
|
|
|