|
குருவும் சீடனும் ஆலமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது ஆரஞ்சுப் பழங்களை விற்றுக் கொண்டு முதியவர் ஒருவர் அங்கு வந்தார். சீடனுக்கு பழம் சாப்பிட ஆசை உண்டானது. ஆனால் குரு நம்மை ஏதாவது கூறி விடுவாரோ என்ற எண்ணத்தில் அப்படியே இருந்தான். அப்போது முதியவர் ஆறு பழங்களை எடுத்து குருவிடம் கொடுத்து, ஐயா, எனது காணிக்கையாக இவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்று கூறி வணங்கி நின்றார். குருவோ சீடனிடம், நீ பழங்களைச் சாப்பிட ஆசைப்பட்டாயல்லவா? சாப்பிடு! என்றார். வியப்படைந்த சீடன், என் ஆசை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்க, தன் ஆசையைத் துறந்தவர்கள் மற்றவர்களின் ஆசையை அறிவார்கள் என்றார் குரு. அப்படியானால் முதியவர் எப்படி உங்களுக்குப் பழங்களைக் கொடுத்தார்? என்றான் சீடன். ஆசையைத் துறந்தவர்களின் கருணைப் பார்வைக்கு யாவரும் கட்டுப்பட்டு விடுவார்கள். என் கருணைப் பார்வைக்கு அவர் காணிக்கையாகப் பழங்களைக் கொடுத்துவிட்டார் என குரு விளக்கம் தர, சீடன் ஆசைகளைத் துறப்பதில் <உறுதி கொண்டான்.
|
|
|
|