|
ஒருநாள் அரசர் ஒருவர் நகர்வலம் போய்க் கொண்டிருந்தபோது துறவி ஒருவரைச் சந்தித்தார். அவரிடம், சுவாமி! என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்... தருகிறேன் என்றார் அரசர். துறவியோ சிரித்துவிட்டு, அரசே! நான் வேண்டுவதைத் தங்களால் கொடுக்க முடியாது! என்றார். கோபங்கொண்ட அரசர், அரண்மனைக்கு வாருங்கள். தருகிறேன் என்று சொல்லிவிட்டு நகர்வலத்தை முடித்துக் கொண்டு அரண்மனை நோக்கி நடந்தார். அரண்மனைக்குச் சென்றதும், ம்ம்ம்... என்ன வேண்டும் சொல்லுங்கள் இப்போது...? என்றார் அரசர். துறவி, தன் பிச்சைப் பாத்திரத்தை நீட்டி, இது நிறைய தங்கக்காசுகளைத் தாருங்கள்! என்றார்.
இதென்ன பிரமாதம்? என்ற அரசர், பொற்காசுகள் கொண்டு வரச் சொல்லி, அந்தப் பாத்திரத்தில் போட்டார். பாத்திரம் நிறையவில்லை! மேலும் கொண்டு வரச் சொல்லி பாத்திரத்தில் போட்டும் அது நிறையவே இல்லை! மேலும் மேலும் காசுகள் போட்டும், பாத்திரம் உள்வாங்கிக் கொண்டிருந்ததே தவிர, நிறைந்தபாடில்லை.... அரசர் திகைத்து நின்றார். அரசே! இந்தப் பாத்திரத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஏனென்றால், பேராசைகளுடன் வாழ்ந்து மடிந்துபோன ஒரு மனிதனின் மண்டை ஓடு இது! என்று சொன்னார் அந்தத் துறவி. இதைக்கேட்ட அரசரின் கர்வம் அகன்றது.
|
|
|
|