|
ஒரு படகில் இரண்டு துறவிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஆற்றின் மறு கரையில் பள்ளத்தாக்கைத் தாண்டியுள்ள நகரத்திற்கு அவர்கள் செல்ல வேண்டும். எதிர்க்கரையில் அவர்களை இறக்கி விட்ட படகோட்டி, துறவிகளே இப்போது நீங்கள் பள்ளத்தாக்கைத் தாண்டிச் செல்ல வேண்டும். எனவே மெதுவாகச் செல்லுங்கள் என்றான். ஒரு துறவி சிரித்தபடியே, தம்பி! நாங்கள் மெதுவாகச் சென்றால் இருட்டிவிடும். சூரியன் மறைந்த பிறகு நகரத்து வாயில் கதவைச் சாத்திவிடுவார்கள் என்பது உனக்குத் தெரியாதா? வெளியில் மாட்டிக் கொண்டு காட்டு விலங்குகளினால் நாங்கள் துன்பப்பட வேண்டுமா? என்றார். மீண்டும் படகோட்டி, என் அனுபவத்தில் சொல்கிறேன். யார் மெதுவாகச் செல்கிறார்களோ அவர்கள்தான் போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைவார்கள் என்று தீர்மானமாகச் சொன்னான். படகோட்டி சொல்வதை மிக உன்னிப்பாகக் கேட்ட இன்னொரு துறவி, அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, இந்த இடம் எனக்குப் புதிது, நீ இங்கிருந்து பழக்கப்பட்ட அனுபவஸ்தன். அதனால் நீ சொல்வதை நான் கேட்கிறேன் என்றபடியே மெதுவாக நடக்கத் துவங்கினார்.
முதல் துறவியோ, நேரம் குறைவாக இருப்பதால் நகரம் நோக்கி விரைவாக ஓடத் துவங்கினார். முதல் துறவியின் தலையில் ஒரு மூட்டை இருந்தது. அது நிறைய பக்திப் புத்தகங்கள் இருந்தன. அவர் ஓடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார் என்றாலும், கதவை மூடிவிட்டால் என்ன செய்வது என்று வியர்க்க விறுவிறுக்க ஓடினார். பள்ளத் தாக்கு வேறு. வேகமாக ஓடியவர், ஒரு பாறை தடுக்கிக் கீழே விழுந்தார். காலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது. துடித்துப் போனார். இரண்டாவது துறவியோ எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் மெதுவாக, ஜாக்கிரதையாக வந்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து, கீழே விழுந்து கிடந்த துறவியைத் தூக்கிவிட்டு, முதலுதவி செய்துவிட்டு மெல்லக் கிளம்பினார். கீழே விழுந்த துறவியால் மேலும் நடக்க முடியவில்லை தவித்தார். ஆனால் இரண்டாவது துறவியோ குறிப்பிட்ட நேரத்தில் நகரத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தார். வாழ்க்கையும் இதுமாதிரிதான். எதையும் அவசரமாக செய்து முடிக்க எண்ணினால் தோல்வியே மிஞ்சும். அதற்கு மாறாக பதட்டமின்றி நிதானமாக செய்தால் வெற்றியை விரைவில் அடைந்து விடலாம்.
|
|
|
|