|
மைசூரில் ராமானாத் கவுசிக் என்ற வசதியான பொறியாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரிடம் மிகவும் பக்தி பூண்டவர். ஒரு புறம் குருதேவர் மறுபுறம் சுவாமிஜி உள்ள புகைப்படத்தை எப்போதும் தன் சட்டைப் பையினுள் வைத்திருப்பார். ஒரு நாள் கவுசிக் அருவிகள் நிறைந்த மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். மிகக் குறுகலான அணைப் பகுதியில் சென்றபோது கால் தவறிக் கீழே விழுந்தார். மலை உச்சியிலிருந்து விழும்போது பாறைகளிடையே இங்கும் அங்கும் இடிபட்டார். அப்போது திடீரென ஒரு குரல் அவர் காதில் ஒலித்தது முட்டாளே! கவனமாக இருக்கக் கூடாதா? அது சுவாமி விவேகானந்தரின் குரல்தான் என்று உணர்ந்தார்!
எப்படியோ ராமானாத் அருவிக்கு நடுவில் உள்ள உயரமான ஒரு பாறையைப் பற்றிக் கொண்டு தப்பித்தார். உடைகள் கிழிந்ததுடன், உடம்பில் சிராய்ப்புகளும் இருந்தன. தான் வைத்திருந்த புகைப்படம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு பதறினார். மேலே வந்த கவுசிக் மறுநாள் தனக்கு நேர்ந்ததை எண்ணியவராய் தோட்டத்தில் அமர்ந்திருந்தார். விழுந்த அதிர்ச்சியும், சுவாமிஜியின் குரலும் மனதை ஆக்கிரமித்தருந்தன. தன் பொக்கிஷத்தை இழந்து விட்டோமே என்று வருந்தினார். அப்போது ஒரு வேலைக்காரர், ஐயா உங்களைப் பார்க்க ஏழை ஒருவர் வந்திருக்கிறார். என்றார்., வேகமாக வந்ததால் மூச்சிரைக்க வந்த அந்த மனிதர், கவுசிக்கிடம் ஒரு புகைப்படத்தை தந்தார். நீரில் இழந்து விட்டோம் என்ற எண்ணியிருந்த அதே படத்தைக் கண்டு கவுசிக் வியப்புடன் உங்களுக்கு யார் இதைத் தந்தது? என்றார். அந்த மனிதரோ, உங்களிடம் தர வேண்டும் என்று எனக்குக் கூறப்பட்டது. அதனால் நான் பல மைல்கள் ஓடி வந்தேன் என்றார்.
நம்ப முடியாமல் கவுசிக் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துப் கொண்டே, நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? என்று கேட்டதற்கு, எனக்குத் தெரியவில்லை. செய்தே ஆக வேண்டும் என்று தோன்றியது அவ்வளவு தான் என்று கூறிச் சென்றார். சுவாமிஜியின் சக்தி அவர் மூலம் செயல்பட்டதோ! சில நாட்களுக்குப் பின் சுவாமி விவேகானந்தரின் மேலைநாட்டு சிஷ்யையான மிஸ் மேக்லவுட்டைச் சந்தித்து நடந்த நிகழ்ச்சியைக் கூறினார் கவுசிக். உடனே இருவரும் அந்தப் புகைப்படத்தை நாணய வடிவில் பத்திரப்படுத்த முடிவு செய்தனர். பாரிஸ் நகரம் சென்ற மேக்லவுட், லலித் என்ற நகைக்கடைக்காரரிடம் விவரத்தைக் கூறி அதை ஒரு நாணய வடிவில் உருவாக்கச் சொன்னார்.
|
|
|
|