|
மாவீரன் நெப்போலியன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தன் தளபதிகள், வீரர்கள் ஆகியோருடன் உற்சாகமாக இருந்தான். தனது வெற்றிக்குக் காரணமாக இருந்த நான்கு தளபதிகளை அழைத்தான். அவர்களைப் பார்த்து, நான் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்! என்றான் நெப்போலியன். முதல் தளபதி, தனக்கு ஒரு பங்களா வேண்டும் என்று கேட்டான். நெப்போலியன் சம்மதித்தான். இரண்டாம் தளபதி, தனக்கு மிகப் பெரிய தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு வேண்டும் என்று கேட்டான். புன்னகையோடு சம்மதித்தான். மூன்றாவது தளபதி, திராட்சை ரசம் தயாரிக்கும் மதுபானத் தொழிற்சாலை வேண்டும் என்று கேட்டான். அப்படியே ஆகட்டும் என்றான் நெப்போலியன் மலர்ச்சியாக.
நான்காவது தளபதியைப் பார்த்தான் நெப்போலியன். கேள், உனக்கு என்ன வேண்டும்? நான் செய்கிறேன் என்றான். எனக்கு ஊருக்குப் போய் குடும்பத்துடன் குதூகலமாக இருப்பதற்கு இரண்டு வாரம் விடுமுறை வேண்டும் என்றான் அவன். நாளையில் இருந்தே நீ விடுமுறையில் செல்லலாம் என்று உடனடியாக அதை நடைமுறைப்படுத்தினான் நெப்போலியன். நான்கு தளபதிகளும் வெளியே வந்தனர். முதல் மூன்று தளபதிகளும் நான்காவது தளபதியைக் கிண்டலாகப் பார்த்தனர். ஏனப்பா... உரிய வாய்ப்பு வரும்போது அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் குழந்தைத்தனமாக லீவு கேட்கிறாயே. நீ என்ன பைத்தியக்காரனா? என்றனர்.
நான்காவது ஆசாமி நிதானமாகச் சொன்னான். நான் கேட்டதுதான் உடனடியாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் கேட்டதெல்லாம் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. பேரரசர் இப்போது வெற்றிக் களிப்பில் இருக்கிறார். நாளையே இந்த நிலை மாறி விட்டால், ஏன் நாங்கள் கேட்டதைக் கொடுக்கவில்லை? என்று உங்களால் பேரரசரிடம் கேட்க முடியாது. யதார்த்தம்தான் எனக்குப் பிடிக்கும். விடுங்கள், நேரமாகி விட்டது. ஊருக்குப் போய் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, தோளில் பையை மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டான். |
|
|
|