|
குரு நர்மத் சிறந்த கவிஞர். குஜராத்தி மொழி அகராதி உருவாக்கும் பணியில் மூழ்கியிருந்தார். இருபத்து நான்கு மணி நேரமும் அகராதிப் பணி ஒன்றே அவர் சிந்தனையை முற்றிலுமாக ஆக்கரமித்துக் கொண்டது. சாப்பாடு தூக்கம் கூட மறந்து விடுவார்; சொற்களின் அர்த்தங்கள் என்னென்ன, சொற்கள் எதிலிருந்து தோன்றின, ஒரு சொல்லிருந்து கிடைக்கும் வேறு சொற்கள் எவை-இப்படியே சிந்தனை செய்வதும் எழுதுவதுமாக காலம் ஒடியது. வீட்டை பற்றிய எண்ண சிறிது கூட இல்லை. ஒருநாள் சமையலறைக்குப் போய் உட்கார்ந்து சமையல்காரரைப் பார்த்து, நிர்பயராம்! சாப்பாடு கொண்டுவா, நேரமாகிறது என்றார். சமையல்காரர் ஒரு மூலையில் உட்கார்ந்து விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். மறுபடியும் நர்மத் குரல் கொடுத்தார். தம்பி! நிர்பயராம் அகராதிப் பணி ஏராளமாகக் குவிந்து கிடக்கிறது. சீக்கிரமாக சாப்பாடு கொண்டுவா. அழுகைக்கு நடுவே திக்கித் திக்கி நிர்பயராம் பதிலளித்தார்: ஐயா! வீட்டில் ஒரு மணி அரிசி கிடையாது. எப்படி சமைப்பது? சொல்லிவிட்டு ஓ வென்று கதறிவிட்டார்.
திடுக்கிட்டார் கவிஞர். சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்களுக்கே லக்ஷ்மிகடாட்சம் சற்று குறைவாகத்தான் கிடைக்கும் போலிருக்கிறது! கவிஞர் சட்டைப் பையைத் துழாவினார். ஒரு நாலாண காசு கிடைத்தது. நிர்பயராம் சுடச்சுட வறுத்த வேர்கடலை வாங்கிக் கொண்டுவா என்று நாலாணவை எடுத்துக் கொடுத்தார். இருவருக்குமே அன்றைய பொழுது அந்த நாலாணவின் தயவில் போயிற்று. ஆனால் கவிஞர் நர்மத் அவர்களின் முகமலர்ச்சி மட்டும் மாறவே இல்லை. லட்சியத்துக்காக வாழ்வது என்றால் இப்படி கரடுமுரடான பாதையை எல்லாம் கடந்தாக வேண்டி இருக்கிறது. |
|
|
|