|
ஒரு ஊரில் சாந்தா என்ற பதினாரு வயது இடையர் குலச் சிறுமி இருந்தாள். அவர்கள் ஊரில் கர்க மகரிஷியின் விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய விளக்க உரை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அவளுடைய பெற்றோர்கள் அவளுக்கு வீட்டில் உள்ள வெண்ணையைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு தாங்கள் இருவரும் உபநயனம் கேட்பதற்கு செல்வதாகக் கூறினார்கள். சாந்தா நாங்கள் திரும்பி வரும் வரையில் பத்திரமாக வெண்ணையைப் பார்த்துக் கொள். கிருஷ்ணன் மிகவும் விஷமக்காரன். அவன் வெண்ணையை விட்டு வைக்க மாட்டான் என்றனர்.
சாந்தா அம்மா நானும் உங்கள் கூட வருகிறேன். கர்கரின் உபந்நியாசத்தைக் கேட்கிறேனே என்றாள். அதெல்லாம் உனக்குக் புரியாது சஹஸ்ரநாமத்தின் உயர்ந்த தத்துவத்தை அவர் விளக்குவது புரிந்து கொள்ள கடினம். நேற்று விஷ்வத்தைப் பற்றி இரண்டு மணி நேரம் விளக்கினார். இன்று விஷ்ணுவைப் பற்றிக் கூறப் போகிறார். சிறிய வயது, உன்னால் புரிந்து கொள்ள முடியாது என்று பெற்றோர்கள் மறுக்க அவளும் அதைக் கேட்டுக் கொண்டாள். அவளுடைய தாய், தந்தை இருவரும் சென்ற பிறகு வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு சாந்தா திறக்க, அங்கு ஒரு வயதான சாமியார் நின்று கொண்டிருப்பதைக் பார்த்தாள். அவர் இவளிடம் தாகம் தீர்ப்பதற்கு தண்ணீர் கேட்க அவரை உள்ளே கூப்பிட்டு அமரவைத்து. நான் உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன் என்றாள் நீ தனியாக இருக்கிறாயா? என்று சுவாமி கேட்டார். ஆமாம் என் தாய் தந்தை இருவரும் கர்கரின் விஷ்ணுசஹஸ்ரநாம உபந்நியாசத்தில் விஷ்ணு என்ற பதத்திற்கு அர்த்தம் கேட்கப் போயிருக்கிறார்கள். எனக்கும் விஷ்ணுவைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது. ஆனால் அந்த விளக்கம் எனக்கும் புரியாது என்று என்னை விட்டுவிட்டுச் சென்று விட்டார்கள் என்று சாந்தா கூறினாள்.
இதற்காக நீ ஒன்றும் வருத்தப்பட வேண்டாம். நான் உனக்கு அதைப் புரிய வைக்கிறேன் என்று சுவாமி பதில் கூறி சாந்தா தண்ணீர் தருவதாகக் காத்திருந்தார். சாந்தா உள்ளே சென்று தண்ணீருடன் வந்த நேரம் சுவாமியைக் காணவில்லை. சமையலறையில் ஏதோ சத்தம் கேட்க, அங்கே ஓடிச் சென்று பார்க்க கிருஷ்ணன் வெண்ணெய் உண்பதைப் பார்த்தாள். வயதான வேடத்தில் வந்து என்னை ஏமாற்றியதுடன், வெண்ணெயைத் திருடி உண்கிறாயா? விஷ்ணு என்பதற்கு அர்த்தம் வேறு சொல்வதாகக் கூறினாயே. நீ விஷமக்காரன் என்று சாந்தா கோபத்துடன் கூறினாள். உடனே கிருஷ்ணன், சாந்தா நீ ஏன் இப்படி கூச்சலிடுகிறாய். நான் வெண்ணெயை உண்டு விட்டு உனக்கு அர்த்தம் கூறுகிறேன் என்றான். தின்றவரை போதும். இனி வெண்ணெயைத் தொடாதே என் தாய் தந்தையார் என்னை அடிப்பார்கள் என்று சாந்தா சொல்வதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணன் வெண்ணெயை விழுங்கினான். பொறுமையிழந்த சாந்தா ஒரு குச்சியை எடுத்து நீ விஷமமா பண்ணுகிறாய் என்று கூறி அவன் முதுகில் அடிக்க, அந்த அடியோ அவள் முதுகிலேயே விழுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
வெண்ணெய் தாழியும் உடைந்து விட்டது. அதுமட்டுமல்ல கதை சொல்லிக் கொண்டிருந்த கர்கரின் முதுகிலும் யாரோ குச்சியால் அடிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது மட்டுமா, அங்கு கதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள், பசுக்கள், கன்றுக்குட்டிகள், எருமை மாடுகள், ஆடுகள், தவளைகள் என்று அனைவருக்குமே முதுகில் அடி உணர்வு ஏற்பட்டிருந்தது. எல்லோருமே ஒரே சமயத்தில் வலியால் குதித்தனர். யார் நம்மை அடிக்கிறார்கள் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். உடனடியாக கிருஷ்ணன் சாந்தாவின் வீட்டிலிருந்து மறைந்து விட்டான். சாந்தா கிருஷ்ணனை அடிக்கப் பயன்படுத்திய குச்சிகூட வலியில் துள்ளியதைப் பார்த்து இது என்ன? என்று அதிர்ந்து கத்தினாள். அப்போது சாந்தா இப்போது நீ விஷ்ணு வின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாயா? என்று அசரீரியாக கிருஷ்ணனின் குறும்புக் குரல் கேட்க சாந்தா விஷ்ணுவின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாள்.
அவன் எல்லாவற்றிலும் உள்ளவன். அவனே எல்லோர்க்குள்ளும் வியாபித்துள்ளான். அதனால்தான் கிருஷ்ணன்னுக்கு அடி விழுந்தபோது எல்லோருக்குமே அது விழுந்துள்ளது. எல்லாவற்றிலும், அனைத்து ஜீவராசிகளிடத்தும் இருப்பவன் அவனே இதை நாம் புரிந்து கொண்டால் நமக்கு யார் மீதும் தீய எண்ணம் ஏற்பட்டது. நம் உடல், மற்றும் ஆத்மாவுக்குள், ஆத்மாவாக வியாபித்திருப்பவன் சர்வக்ஞனான ஸ்ரீவிஷ்ணு தான்.
|
|
|
|