|
இளைஞன் ஒருவன் சிறந்த குரு ஒருவரிடம் ஞானம் பெற வேண்டி ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தான். ஊருக்கு வெளியே மரத்தடியில் அமர்ந்திருந்த ஞானியை வணங்கி, ஐயா! சிறந்த குரு ஒருவரிடம் என் ஐயப்பாடுகளை நீக்கிக் கொள்ள விரும்புகிறேன் தாங்கள்தான் பதில் தர வேண்டும் என்றான். தொடர்ந்து தேடு என்றார் ஞானி. உண்மை உணர்ந்த குரு எங்குள்ளார்? அவரை நான் எப்படி அடையாளம் காண்பது? உனக்கு வழிகாட்டக்கூடியவர் மரத்தடியில் எந்த விரிப்பும் இல்லாமல் சாந்த ரூபமாய் கண்களை மூடி சயனத்திருப்பார். அவர் அருகே இரட்டைப் பனை மரங்கள் இருக்கும். நன்றி கூறி புறப்பட்ட அவனது பயணம் தொடர்ந்தது குரு சொன்ன அடையாளங்களில் ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. எல்லா அடையாளங்களும் பொருந்திய நபரை அவனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இப்படியே இருபது வருடங்கள் ஓடியது. கடைசியாக அவன் குரு கூறிய அத்தனை அடையாளங்களும் பொருந்திக் காணப்பட்டவரைக் கண்டு ஓடி வந்து அவரது காலில் விழுந்தான். பின் நிமிர்ந்து பார்த்தவன் திகைத்தான். முதன் முதலில் தொடர்ந்து தேடு என்று சொன்ன குருவே தான் இவர். வந்துவிட்டாயா? வா அதற்குள் இருபது வருடம் ஓடிவிட்டது இல்லையா? என்றார் குரு. ஐயா! தாங்கள்தானா? என்றான் அவன் திகைப்பிலிருந்து மீளாமல். ஆம் நானேதான், ஆனால் அதை உணர்ந்து கொள்ள உனக்கு இத்தனை கால அவகாசம் தேவைப் பட்டிருக்கிறது. நான் உனக்கு எல்லா அடையாளங்களையும் சரியாகச் சொன்னேன் ஆனால் நீ இருக்கும் இடத்தைச் சுற்றி கவனிக்க வில்லை. வெளியே எங்கோ தேடிக் கொண்டிருந்தாய். ஒரு விநாடி நீ கவனமுடன் செயல்பட்டிருந்தால் அப்போதே உணர்ந்திருப்பாய் என்றார் குரு.
|
|
|
|