|
இலங்கை மன்னன் ராவணேஸ்வரன் ஒரு சிறந்த சிவபக்தன். சாமகானத்தை இசைத்து இறைவனையே தன்வயப்படுத்திய இசைக்கலைஞன். பரமேஸ்வரனிடம் அளவற்ற பக்தி கொண்டவன் அவனுடைய தவத்தையும் பக்தியையும் மெச்சிய சிவபெருமான் அவனுக்கு ஒரு தேரையும் சந்திரஹாசம் என்னும் வாளையும் அளிக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த, எதிரிகளை அழிக்கக் கூடிய அந்த வாளை ஆயுதம் இல்லாமல் போரிடுபவரிடம் பயன்படுத்தக்கூடாது. மீறிப் பயன்படுத்தினால் ஈசனின் அருளும் வாளும் அவனை விட்டு நீங்கும் என இறைவன் அறிவுறுத்துகிறார்.
பர்ணசாலையில் இருந்து சீதையை வஞ்சகமாகக் கவர்ந்து கொண்டு ராவணன் இலங்கை நோக்கி வருகிறான். அப்போது ஜடாயு என்று கழுகரசன் சீதையைக் காப்பாற்ற வேண்டி ராவணனை பறந்து வந்து தாக்குகிறது. அலகால் அவனைக் கொத்துகிறது. கோபமுற்ற ரவனேஸ்வரன் தன் வாளை எடுத்து ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி எறிகிறான். ஜடாயு கீழே விழுகிறது. ஆயுதம் இல்லாத ஜடாயுவின் மேல் அந்த தெய்வீக வாளை உபயோகித்ததால் அது ராவணனை விட்டுப் பிரிந்தது. இறைவனின் அருளும் விலகிற்று.
|
|
|
|