|
ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து தன் அன்றாடப் பணிகளை முடிப்பான். பக்கத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்று ஆண்டவனைத் தொழுவான். தன் தேவைகளைச் சொல்லி ஆண்டவனிடம் முறையிடுவான். இது அவன் அன்றாட வேலை. அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவர், இதை தினமும் கவனித்துக் கொண்டேயிருந்தார். அவனை அழைத்த அவர், தம்பி, நான் ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறாயா? என்றார். ம்... சொல்<லுங்கள். ஒரு ஊரில் ஒரு தத்துவஞானி இருந்தார். அவர் செருப்புக்கூட அணிவதில்லை. அவன் தினசரி கடைவீதிக்குச் செல்வார். ஒவ்வொரு கடையாக நின்று பார்ப்பார். அங்கே என்னென்ன பொருட்கள் விற்பனை ஆகின்றன என்று பார்ப்பார். எதையும் அவர் வாங்கியதே இல்லை. சும்மா திரும்பி வந்துவிடுவார். அவருடைய நண்பர், ஞானியிடம் பேசினார், நீங்கள் ஏன் தினமும் கடைவீதிக்குப் போகிறீர்கள்? அங்கே என்னென்ன பொருட்கள் விற்பனையாகின்றன என்பதை கவனிப்பதற்காக! ஆனால் நீங்கள் எதுவும் வாங்குவதில்லையே? ஆமாம். அப்புறம் எதற்கு அனாவசியமாக அங்கே போகவேண்டும்? அங்குள்ள பொருட்களில் எத்தனை பொருட்கள் இல்லாமல் நான் நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக என்று புன்னகைத்தார் ஞானி. இந்தக் கதையைச் சொல்லி முடித்தார் பெரியவர். அதுசரி, இந்தக் கதையை எதற்கு என்னிடம் சொல்கிறீர்கள்? என்று கேட்டான். ஓர் உண்மையைப் புரிய வைப்பதற்காக! என்ன உண்மை? பக்தி என்பது உனக்கு என்ன தேவை என்பதை அறிவது அல்ல; உனக்குத் தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதே...
|
|
|
|