|
ஒருமுறை பிரபலமான ஓவியர் ஒருவர்,
தன் மனைவியோடும், தன் இரு மகன்களோடும் மலைப் பிரதேசம் ஒன்றிற்கு சுற்றுலா
சென்றிருந்தார். இயற்கை எழிலை ரசித்தபடியே அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
ஓரிடத்தின் இயற்கை அழகைக் கண்ட ஓவியர் அதனை அப்படியே வண்ணம் தீட்ட
விரும்பினார். ஆனால் அவரது மகன்களோ ஒரே இடத்தில் நேரம் கழிக்காமல் மேலும்
பல இடங்களுக்குச் செல்ல ஆசைப்பட்டனர். ஒரு அரைமணி நேரம் அங்கே இருந்தால்
போதும், அதற்குள் வரைந்து விடலாம் என நினைத்த ஓவியர் மனைவியிடம் ஆலோசனை
கேட்டார். குழந்தைகள் ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும்படி ஏதாவது ஒரு வழி
செய்தால், அங்கேயே கொஞ்ச நேரம் இருக்கலாம் என்று அவர் மனைவி கூறினார். நல்ல
யோசனை எனப் பாராட்டிய ஓவியர், தன் டைரியை எடுத்து அதன் பின் அட்டையில்
உள்ள உலக வரைபடத்தைத் தனியாகக் கிழித்தார். பிறகு அதனை பன்னிரண்டு
துண்டுகளாக வெட்டினார். தன் மகன்களை அழைத்து, நாம் அடுத்த இடத்துக்குப்
போவதற்கு முன் உங்களுக்கு ஒரு போட்டி. இதோ இந்தத் துண்டுக் காகிதங்களை
சரியானபடி ஒன்று சேர்த்தால் உலக வரைபடம் வரும். நீங்கள் எவ்வளவு சீக்கிரம்
அதனைச் செய்கிறீர்கள் என்று பார்க்கலாம்..! என்று சொல்லி, காகிதத்
துண்டுகளைக் கொடுத்தார். மகன்கள் ஆர்வமாக அதனை சேர்க்க ஆரம்பிக்க, அவர்
இயற்கையைக் காட்சியை படமாக்க ஆரம்பித்தார். மனைவி சொன்ன யோசனைதான் ஓவியரின்
லட்சியம் நிறைவேற வழிமுறை என்று நினைத்த விடாதீர்கள்.
ஆர்வமாக
துண்டுக் காகிதங்களை வாங்கிக் கொண்டார்கள் சிறுவர்கள். ஆஸ்திரேலியா,
வரைபடத்தின் வலது பக்கம் இருக்கும். இடது பக்கம் அமெரிக்காவின் அலாஸ்கா!
இப்படி யெல்லாம் சொன்ன மூத்தவன், தம்பியைவிட தனக்கு அதிகம் தெரியும் எனச்
சொல்லி, அவசர அவசரமாக துண்டுக் காகிதங்களைச் சேர்க்கும் முயற்சியை
ஆரம்பித்தான். நேரம் நகர்ந்தது. ஆனால் பல்வேறு துண்டுகளாகிவிட்டதால் அவனால்
ஓரிடத்தையும் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருந்த தம்பி சொன்னான். அண்ணா, என்னால் இரண்டே நிமிடத்தில்
இந்தத் துண்டுக் காகிதங்களை ஒன்றாகச் சேர்த்து உலக வரைபடத்தினை
உருவாக்கிவிட முடியும். தம்பி சொன்னதை நம்பாமல் ஏளனமாகப் பார்த்தபடியே
காகிதத் துண்டுகளை அவனிடம் தந்தான் பெரியவன். துண்டுக் காகிதங்களை வாங்கிய
இளையவன், சொன்னபடியே இரண்டே நிமிடத்தில் அதை உலக வரைபடமாக ஒன்று சேர்த்துக்
காட்டினான். ஆச்சரியப்பட்டான், அண்ணன். நடந்ததை எல்லாம் பார்த்துக்
கொண்டிருந்த அவர்களின் அம்மாவும் வியந்தாள். எப்படி உன்னால் இவ்வளவு
சீக்கிரம் உலக வரைபடத்தினை ஒன்று சேர்க்க முடிந்தது? அம்மாவும், அண்ணனும்
ஒரு சேரக் கேட்டார்கள். உலக வரைபடத்தை நான் சரியாகப் பார்த்ததுகூடக்
கிடையாது. ஆனால் நான் இந்தப் படத்தை உருவாக்கியது வேறு விதத்தில்...! சொன்ன
தம்பி, மெதுவாக அந்தப் படத்தினைத் திருப்பிக் காட்டினான். அங்கே ஒரு
மயில், கோட்டோவியமாக வரையப்பட்டிருந்தது. கிழிக்கப்பட்ட காகிதத்தின்
மறுபக்கம் ஏதோ வரையப்பட்டிருப்பதைப் பார்த்த நான், அது ஒரு மயிலின் உருவம்
என்பதைப் புரிந்துகொண்டேன். எனவே காகிதத் துண்டுகளைப் பின்புறமாகத்
திருப்பி, ஒன்று சேர்த்து மயில் வடிவம் வரச் செய்தேன். பிறகு அப்படியே
எல்லாத் துண்டுகளையும் சேர்த்துத் திருப்பினேன். அவ்வளவுதான்...! தம்பியின்
பதில், அவன் சமயோசிதத்தை மற்றவர்களுக்குப் புரியவைத்தது. லட்சியம் நிறைவேற
வேண்டுமானால் ஒரே வழியில் நம் முயற்சிகளை மேற்கொள்ளாமல் பலவழிகளிலும்
முயன்றால் வெற்றி நிச்சயம். |
|
|
|