|
தன் சீடர்களுடன் ஒவ்வொரு ஆலயமாக தரிசனம் செய்து கொண்டு வந்தார் ஆசார்யார் நம்பிகள். நம்பிள்ளை மாளிகையில் சீடர்களுடன் ஆசார்யார் தங்கினார். சீடர்கள் நிறைய பேர் இருந்ததால் ஒரே ஒரு பிரம்மசாரி சீடருக்கு மட்டும் நம் பிள்ளை மாளிகையில் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. மாளிகையின் பக்கத்தில் ஆசார்யாரின் சிஷ்யையான ஓர் அம்மையாரின் வீடு இருந்தது. இடம் கிடைக்காத பிரம்மசாரி, அந்த அம்மையாரின் வீட்டுக்கு வந்தான். அம்மா, எனக்கு இன்றிரவு மட்டும் தங்கிக் கொள்ள இடம் தரமுடியுமா? என்று கேட்டான். முடியாது என்று மறுத்தார் அம்மையார். பிரம்மசாரி, ஆசார்யார் நம்பிகளிடமே முறையிட்டார். ஆசார்யார் உடனே, அந்த அம்மையாரை அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார். வந்தார் அம்மையார். ஏனம்மா அப்படிச் சொல்லிவிட்டாய்? என்றார், ஆசார்யார். அம்மையார் பணிவுடன் தலை வணங்கி, நான் பிரம்மசாரிக்கு தங்க இடம் தருகிறேன். பதி<லுக்கு எனக்கு நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். என்ன?
நான் என் வீட்டில் தங்க இடம் கொடுத்தால், எனக்குப் பரமபதத்தில், சொர்க்கத்தில் தங்க நீங்கள் இடம் வாங்கித் தரவேண்டும். சரியம்மா. நிச்சயமாக உனக்குப் பரமபதத்தில் இடம் <உண்டு. நீங்கள் வாயால் சொன்னால் மட்டும் போதாது. அதை எழுதித் தர வேண்டும். என்று பிடிவாதம் காட்டினார் அம்மையார். உடனே ஆசார்யார், இந்த தேதி, இந்த மாதம், இந்த நாள், அம்மையாருக்கு பரமபதத்தில் இடம் தரவேண்டும் என்று பரந்தாமனுக்கு ஒரு கடிதம் எழுதி, கையொப்பமிட்டு அம்மையாரிடம் கொடுத்தார். அம்மையார் மகிழ்வுடன் அதைப் பெற்றுக் கொண்டு, பிரம்மசாரி தங்க இடம் கொடுத்தாள். அதற்கு அடுத்த மூன்றாம் நாள், அந்த அம்மையார் மரணமடைந்தார். அவர் பரந்தாமனின் பாத கமலத்தைப் பற்றிக் கொண்டு, பரமபதத்தில் சந்தோஷமாக இருந்தார்.
|
|
|
|