|
ஒரு துறவி அடர்ந்த காட்டின் வழியே தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். வழியில், வேட்டைக்கு வந்திருந்த ஒரு மன்னனையும், அவன் வீரர்களையும் சந்தித்தார். துறவியும் அரசனும் பேசிக்கொண்டிருந்த போது ஒரு பெரும் சத்தம் கேட்டது. அது அச்சத்தை ஏற்படுத்தியதால், அரசன் உள்பட எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். கடைசியாக முனிவரும் ஓடத் தொடங்கினார். சற்று தொலைவு சென்றதும் பயம் நீங்கி எல்லோரும் நின்றார்கள். மன்னன், துறவியிடம் அது என்ன சத்தம்? என்று கேட்டான். சாதாரண இடி ஓசைதான் அது. நாம் காட்டுக்குள் இருந்ததால் பயங்கரமாக எதிரொலித்தது..! சொன்னார் துறவி. எங்களுக்கு அது என்ன சத்தம் எனத் தெரியாததால் நாங்கள் பயந்தோடி வந்தோம். வெறும் இடியோசை எனத் தெரிந்திருந்தும் நீங்கள் அஞ்சி ஓடியது ஏன்? ஆச்சரியமாகக் கேட்டான் அரசன். புன்முறுவல் செய்த துறவி சொன்னார். நான் அந்த சத்தத்திற்கு பயந்து ஓடி வரவில்லை... நீங்கள் எல்லாம் அஞ்சி ஓடியபோது நான் மட்டும் அஞ்சாமல் நின்றிருந்ததாக தலைகனம் எனக்கு வந்து விடக்கூடாது என்பதால்தான் ஓடிவந்தேன்!
|
|
|
|