|
தன்னுடைய அந்தப்புரத்திற்குள் யாரும் அனுமதியின்றி நுழையக்கூடாது. எனவே அதற்கு ஒரு காவலாளி வேண்டுமென்று நினைத்தாள் பார்வதி தேவி. தன் உடலிலே கமகமத்துக் கொண்டிருந்த மஞ்சள், குங்குமம், வாசனை திரவியங்களை வழித்தெடுத்து ஓர் அழகிய உருவம் படைத்தாள். அந்த மனித உருவத்திற்கு உயிரும் கொடுத்து, காவலுக்கு அவனை வைத்துவிட்டு, குளிக்கப் போய்விட்டாள். கொஞ்ச நேரம் கழித்து பரமசிவன் அங்கே வந்தார். தன் மனைவியின் அந்தப்புரத்திற்குள் நுழைய முற்பட்டார். தேவியின் அனுமதியின்றி உள்ளே நுழையக்கூடாது எனத் தடுத்தான் சிறுவன். இதனால் கோபமடைந்த ஈசன், சிறுவனின் கழுத்தை சீவித் தள்ளிவிட்டார். உண்மையிலேயே அந்த சிறுவன் யாரென்று சிவபெருமானுக்குத் தெரியும். எல்லாம் அவர் நடத்திய லீலைதான்.
ஒரு சமயம் கஜமுகாசுரன் என்ற கொடிய அசுரன் யானைத் தலை உள்ள மனிதன் ஒருவனால்தான் தனக்கு மரணம் வரவேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான் அவன். அதுவும் அந்த யானைத்தலை மனிதன், ஒரு தாயின் வயிற்றிலிருந்து அவதரித்திருக்கக்கூடாது என்ற நிபந்தனை வேறு! தனக்கு மரணம் வரக்கூடாது என்பதைத்தான் ரொம்ப புத்திசாலித்தனமாக அப்படிக் கேட்டிருந்தான்! அப்புறம் என்ன? அவனை அழிப்பதற்கே இந்த லீலை. குளித்து விட்டு திரும்பி வந்த பார்வதி ஆவேசமடைய, வடக்கே தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்த ஒரு யானைக்கு மோட்சம் தந்து அதன் தலையை, பிள்ளைக்கு வைக்க, பிள்ளையார் தோன்றினார். இந்தக் கதை சொல்லும் நீதி உங்களுக்குத் தலையே போகும் அளவுக்குப் பிரச்னை வந்தாலும் கலங்காதீர்கள். எல்லாம் அந்த ஆண்டவனுக்குத் தெரியும். எல்லாம் அவனது திருவிளையாடல்தான். உங்களுக்குப் பெரிதாக ஒரு நல்லது செய்வதற்காகவே சோதனையைத் தருகிறார் என்பதை உணருங்கள். |
|
|
|