|
குரு தன் சீடன் ஒருவனுடன் ஒரு கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள பெருமாள் கோயிலில் விமரிசையாக அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் குழுமி பக்தியாக வழிபட்டுக் கொண்டிருந்தனர். இங்குள்ள மக்கள்தான் சிறந்த பக்திமான்கள்.. குருவே என்றான், சீடன். குரு மௌனமாயிருந்தார். அப்போது ஒருவர் வந்தார். கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தார். கன்னத்தில் தட்டிக் கொண்டார். ஏதோ உச்சரித்தார். வந்த வழியே திரும்பினார். குரு அவரிடம் கேட்டார். ஏனப்பா... இன்றைக்கு ஏகாதசி நாள். பகவானை தரிசிக்கவில்லையா...? மந்திரங்களை உச்சரிக்கவில்லையா...?
சுவாமி! இது வேலைக்குச் செல்லும் நேரம். என் தாய்க்கு உடல் நலம் சரியில்லை. மருத்துவரிடம் காண்பித்து வருகிறேன். குழந்தைகளை பள்ளியில் விட்டுச் செல்ல வேண்டும். மனைவியின் தந்தை ஊரிலிருந்து வருகிறார். வேலையிலிருந்து சீக்கிரம் திரும்பி வந்து அவரை விசாரிக்க வேண்டும். இன்றைக்கு ஏகாதசி எனவும் தெரியாது. மந்திரங்கள் எதுவும் தெரியாது. தினமும் நாராயணா நல்வழிகாட்டு என உச்சரிப்பேன். சரியான நேரத்தில் வேலைக்குச் சென்று சரியானபடி செய்வேன். இதுவே நானறிந்தது... வருகிறேன். என்று சொன்னார்.
குரு சிரித்தபடி சீடனே...! இவனே மிகப் பெரும் பக்திமான். கடமையைச் செய்வது, அதுவும் காலத்தோடு செய்வதே மிக உயர்ந்த பக்தி... உலக வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் இவனது தினசரி நடவடிக்கைகளில் உள்ளன. அதைச் சலிக்காமல், வெறுக்காமல் பொறுப்பாகச் செய்கிறான். கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம். அவன் பக்தியோடு சொல்லிய நாராயணா எனும் மந்திரம் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்குச் சமம் என்றார்.
|
|
|
|