|
ஒரு குழந்தை எப்பொழுதும் ஏதாவது விஷமம் செய்துகொண்டே இருப்பான். தந்தையை இழந்த அவனை அவனுடைய தாயார் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். அவளோ ஏழை, வருமானத்துக்கு வழியில்லை. எப்படிக் குடும்பத்தை நடத்துவாள்? ஏதோ தனக்குத் தெரிந்த எம்பிராய்டரி வேலையைச் செய்து, அதனால் வரக்கூடிய வருமானத்தை வைத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தாள். இவள் வேலையில் ஆழ்ந்திருக்கும் சமயமாகப் பார்த்து, அவளுடைய சுட்டிப்பையன் வீட்டுக்கு வெளியே விளையாட ஓடிவிடுவான். அப்படி அவன் வெளியே சென்றவுடனே, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் புகார்கள் நிறைய உள்ளே வர ஆரம்பித்துவிடும். ஒரு நாள் அந்தத் தாயாருக்கு, தான் முடித்துக் கொடுக்கவேண்டிய பூ நூல் வேலைகள் நிறைய இருந்தது. பையனை வெளியில் அனுப்பினால், அவளால் நிச்சயமாக நிம்மதியாக வேலை செய்ய முடியாது. உயரமான ஸ்டூலில் அமர்ந்து எம்பிராய்டரி வேலைகளைச் செய்துகொண்டிருந்த அவள், தன் பையனை அழைத்து காலடியில் அமர்த்திக் கொண்டார்.
அவனுக்குச் சிறிதுநேரம்கூட அமர்வதற்குப் பொறுமை இல்லை. நான் வேலையை முடித்து வரும்வரை பொறுமையாக நீ அமர்ந்திருந்தால், நீண்ட நாட்களாக நீ ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் ஆடையை வாங்கித் தருவேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி அவனை உட்கார வைத்துக்கொண்டிருந்தாள். பொறுமையை இழக்கும்போதெல்லாம் அவன், அம்மா வேலை எப்பொழுது முடியும் என்று பார்ப்பான். அப்பொழுது வளையத்துக்கு இடையில் ஒரு துணி இருப்பதும், அதன் கீழே பல வர்ணத்தில் உள்ள நூல்கள் தாறுமாறாகத் தொங்குவதையும் பார்ப்பான், அப்பொழுது, அவனுக்குச் சிரிப்பு வரும். நம் அம்மாவுக்கு ஏதோ ஆகிவிட்டது. இப்படிப் பல வர்ணங்களில் உள்ள நூல்களை வைத்துக்கொண்டு ஊசியால் குத்திக் குத்தி எடுக்கின்றாள். அது, தாறுமாறாக எப்படிக் கீழே தொங்குகின்றது என்று நினைத்தான். அம்மாவின் வேலையும் முடிந்தது.
அவன் அம்மாவிடம், எதற்காக இப்படிப் பல வர்ண நூல்களையும் துணி ஊசியையும் வைத்துக்கொண்டு, ஒழுங்கு இல்லாமல் ஏதோ குத்திக்குத்தி நேரத்தை வீணடிக்கின்றாய்? என்றான். அப்பொழுது, அவள் அதன் மேல்பாகத்தைக் காண்பித்தாள். அவன், ஒருகணம் அதிசயித்துவிட்டான். ஆம்! அதில் பல வர்ணங்களால் ஆன அழகான வண்ணத்துப்பூச்சி உருவம் இருந்தது. அந்தக் குழந்தை போல்தான் நாமும் எல்லாவற்றையும் கீழேயிருந்து பார்க்கின்றோம். கீழேயிருந்து என்றால் என்ன? குறுகிய மனப்பான்மை, சுயநலம், பொறாமை போன்றவற்றுடன் கூடிய பார்வைதான் கீழேயிருந்து பார்க்கும் பார்வை. அப்படிப் பார்த்தால், உலகத்தில் ஏதோ தவறு இருப்பதாகத் தெரியும். மேலிருந்து பார்த்தால், அதாவது, உயர்ந்த மகான்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், இந்த உலகத்தில் அழகு இருப்பது தெரியும். கடவுளின் செயல்கள் எப்பொழுதும் சரியே என்று உணர்ந்து விடுவோம். |
|
|
|