Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தவப்பலன்
 
பக்தி கதைகள்
தவப்பலன்

மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர்

சுதபஸ் என்ற மகரிஷி பிருக்னி என்ற அழகிய பெண்ணை மணந்து நல்லறம் பேணி இல்லறம் நடத்தி வந்தார். ஆயினும் அவர்களுக்குப் புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. தம் மனைவியின் மனக்குறையை உணர்ந்த மாமுனிவர், புத்திர பாக்கியம் வேண்டி பிரம்ம தேவரைக் குறித்துக் கடும் தவம் செய்யத் தொடங்கினார். அவர் மனைவி பிருக்னியும் அருகிலிருந்து தம் கணவரின் தவத்திற்குப் பங்கம் வராமல் கவனித்துக் கொண்டாள். நீண்ட கால தவத்தின் விளைவாக பிரம்ம தேவர் அவர்கள் முன் தோன்றினார். சுதபஸ் முனிவர் அவரைப் பார்த்து, பிரம்ம தேவரே ! எங்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைக்காதது ஏன்? என்று கேட்டார். பிரம்ம தேவர், தவ சிரேஸ்டரே, பகவான் ஸ்ரீமந் நாராயணன் கருணையே வடிவானவன். தன்னை யார் சரண் அடைகிறார்களோ அவர்களை ரட்சித்துக் காப்பாற்றக் காத்திருப்பவன். அவனது அருள் <உங்களுக்கு எப்போதும் உண்டு. அவரே உங்களுக்குத் திருக்குழந்தையாக அவதரிக்கத் திருவுள்ளம் கொண்டுள்ளார். அதனாலேயே உங்களுக்குப் புத்திரபாக்கியம் அருள்வதில் தாமதமேற்பட்டது. முனிவரே, இதோ இந்த விக்ரகம் பகவானால் எனக்கு அளிக்கப்பட்டது. நான் பூஜித்து வந்த விக்ரகம். இதை நான் <உங்களுக்குத் தருகிறேன். இதை வைத்துப் பூஜித்து வாருங்கள். உங்களுடைய ஆசை நிறைவேறும்! என்று கூறி ஒரு விக்ரகத்தை சுதபஸ் முனிவரிடம் கொடுத்து விட்டு மறைந்தார்.

சுதபஸ் முனிவரும் அவருடைய மனைவி பிருக்னியும் பிரம்மன் அளித்த விக்ரகத்தை தினந்தோறும் பிரார்த்தித்து வந்தனர். ஒரு நாள் மகாவிஷ்ணு மனமிரங்கி அவர்கள்முன் பிரசன்னமானார். தவ முனிவரே! உங்கள் பக்தியையும் தவத்தையும் கண்டு உள்ளம் மகிழ்ந்தோம். பகவானுக்கு ஒப்பான புத்திரன் வேண்டும் என்று வேண்டினீர்கள். எனக்கு ஒப்பானவர்கள் யாருமே இல்லாதபடியால் நானே உங்களுக்குப் புத்திரனாக அவதரிக்கப்போகிறேன். மேலும் நீங்கள் பக்தி, பணிவு, ஆச்சர்யம் ஆகிய மூன்று பாவனைகளில் மனம் உருகிப் பிரார்த்தனை செய்து வந்ததால் உங்களுக்கு மூன்று ஜன்மங்களில் தொடர்ந்து புத்திரனாக அவதரிப்பேன். பிரம்மனுக்கு நான் அளித்த இந்த விக்ரகத்தையே தொடர்ந்து ஆராதித்து வாருங்கள்! என்று கூறி மறைந்தார். சுதபஸ் முனிவரும் அவருடைய மனைவியும் இறைவன் திருவாய் மலர்ந்தருளியதைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தனர் அந்த கிருஷ்ண விக்ரகத்தைத் தொடர்ந்து பக்தியுடன் பூஜித்து வந்தனர். அதன் பயனாக பகவான் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்தார். பிருக்னி கர்ப்பன் என்ற பெயர் சூட்டினர். பகவானே தங்களுக்குக் குழந்தையாகப் பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த அவர்கள் ஆசையோடும் அன்போடும் அந்தக் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டிப் போற்றி வளர்த்தனர்.

சகல கலைகளையும் கற்பித்தனர். தன் தந்தையிடமே அனைத்தையும் கற்ற பிருக்னி கர்ப்பன் சான்றோனாகத் திகழ்ந்தான். அடுத்த ஜென்மத்தில் சுதபஸ் முனிவரும் அவரது மனைவி பிருக்னியும் காசிபராகவும் அதிதியாகவும் பிறந்தனர். ஸ்ரீமன்நாராயணன் அவர்கள் மகனாக, வாமனராக அவதரித்தான். வாமனன் தன் தந்தையிடமே வேத சாஸ்திரங்களைக் கற்று வித்தகனாக விளங்கினான். மூன்றடி மண் கேட்டு பகவான் மன்னன் மகாபலியை பாதாள லோகத்தில் அழுத்தினார். அடுத்த ஜென்மத்தில் வசுதேவராகவும், தேவகியுமாகப் பிறந்தனர் சுதபஸ் முனிவரும் அவரது மனைவி பிருக்னியும். தேவகியும் வசுதேவரும் தவத்தின் பயனாக ஸ்ரீமந் நாராயணன் கிருஷ்ண பரமாத்மாவாக அவதாரம் செய்தான். மாயக் கண்ணனாக கோகுலத்தில் வளர்ந்தான். அரக்கர்களை வேடிக்கையாகவே மாய்த்து முடிவில் கம்சனைக் கொன்று தாய் தந்தையரை சிறையிலிருந்து மீட்டான். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவி புரிந்து வெற்றி பெறச் செய்தான். போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு கீதையை <உபதேசம் செய்தருளினான். வசுதேவர், தேவகியரால் ஆராதிக்கப்பட்ட விக்ரகம் பின்னர் ருக்மணி தேவியால் பக்தியுடன் பூஜிக்கப்பட்டது. பிரளயத்தில் மூழ்கும் நிலை துவாரகைக்கு ஏற்பட்டது. அத்தருணம் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் செல்லும்போது உத்தவரிடம் இந்த விக்ரகத்தைக் கொடுத்து, குருபகவானும் வாயுபகவானும் இதை எடுத்துப் போய் பரசுராம ÷க்ஷத்ரம் எனப்படும் கேரளத்தில் ஸ்தாபிக்கும்படி பணித்தார். உத்தவர் பகவானுடைய ஆணையை தேவ குருவிடம் தெரியப்படுத்திவிட்டு பத்ரிகாச்ரமம் சென்று தவத்தில் அமர்ந்தார்.

தேவகுருவான பிரகஸ்பதியும் வாயு பகவானும் விக்ரகத்துடன் ஆகாய மார்க்கமாக சஞ்சரித்து மேற்குக் கடற்கரையோரத்தை அடைந்தனர். அங்கே பூர்வத்தில் பிராசேதஸ்ஸுகள், ஹர்யச்வர்கள், சபலாச்வர்கள் ஆகியோர் ருத்ர கீதம் பாடித் தவம்புரிந்த ருத்ர தீர்த்தம் எனப்படும் நாராயண சரஸை அடைந்தார்கள். அங்கு நீராடிக்கொண்டிருந்த பரமேஸ்வரனை அடைந்து நமஸ்கரித்தார்கள். அவரும் அந்தத் தடாகத்தின் தென்கரையில் அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்யும்படி ஆணையிட்டார். இந்த பகவத் பிரதிஷ்டைக்குக் காரணமான குருவையும் வாயுவையும் என்றென்றும் மறக்க முடியாதபடி இந்தச் ÷க்ஷத்ரம் குருவாயூர் என்றும் தட்சிண துவாரகை என்றும் மகோன்னதம் அடையும்! என்று ஆசிர்வதித்தார். சுதபஸ், பிருக்னி தம்பதிகள் மூன்று ஜென்மங்களிலும் கிருஷ்ணரின் அபூர்வ விக்ரகத்தை தொடர்ந்து பூஜித்து வந்தார்கள். முடிவில் குரு, வாயு ஆகியோரால் குருவாயூரில் அந்த விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர்களால் பூஜிக்கப்பட்ட இந்த கிருஷ்ண விக்ரகமே குருவாயூரப்பன் என்னும் திருநாமங்கொண்டு நிலைத்து விட்டது. மூன்று பிறவிகளிலும் கிருஷ்ண பரமாத்மாவைப் புத்திரனாகப் பெற்ற சுதபஸ், பிருக்னி தம்பதிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar