|
யோகி ஒருவர் தன் சீடர்களுடன் பை நிறைய கோதுமைப் பண்டத்தோடு பயணம் செய்துகொண்டிருந்தார். மதியம், வெயிலின் கொடுமை தாங்காமல், வழியிலிருந்த தோப்பில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு பின் பயணத்தைத் தொடர்ந்தனர். பல மைல் தூரம் சென்ற பின்பு, தன்னிடம் உள்ள கோதுமைப் பையில் சில எறும்புகளைக் கண்டார், யோகி. மதியம் ஓய்வு எடுத்த மரத்தின் அடியில் இருந்தவைதான் அவை என்பதை அறிந்து கொண்ட யோகி, அவற்றை அங்கேயே கொண்டுபோய் விட்டுவிட முடிவு செய்து, வந்த வழியே சிரமம் பார்க்காமல் நடந்து சென்று அம்மரத்தின் அடியில் பையைத் திறந்து அந்த எறும்புகளை விட்டார். யோகியுடன் கூடவே வந்த சீடர்கள், சுவாமி! இந்த எறும்புகளுக்காக நீங்கள் இவ்வளவு சிரமப்படத்தான் வேண்டுமா? எனக் கேட்டனர். உதவியற்ற உயிரினங்கட்கு அனுதாபம் காட்டி உதவி செய்வது ஆண்டவனுக்கு நேரடியாகச் செய்யும் உதவியைப் போன்றதாகும். அனைத்து உயிரினங்களிலும் இறைவனைக் காணும் சர்வாத்ம பாவத்தை இனி நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என சீடர்களுக்கு உபதேசித்தார், யோகி. |
|
|
|