|
குரு ஒருவரிடம் மூன்று சீடர்கள் படித்துக் கொண்டிருந்தனர். ஒருநாள் அவர்களை அழைத்த குரு, உங்கள் கல்வி முடிந்துவிட்டது. நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம்! என்றார். நம்மைப் பரீட்சித்துப் பார்க்கவில்லை. எவ்விதத்திலும் திறமையை சோதிக்கவில்லை. எவ்வாறு கல்வி முடிந்து விட்டது என குரு கூறுகிறார்? என சிந்தித்தவாறே மூவரும் கிளம்பினர். வழியில் ஓரிடத்தில் முள் சிதறிக்கிடந்தது. முதல் மாணவன் ஒரே பாய்ச்சலில் தாண்டி, தன் பயணத்தைத் தொடர்ந்தான். அடுத்தவனால் அவ்வாறு பாய முடியவில்லை. அதனால் முட்களுக்கு இடையே கால் வைக்கும் அளவிற்கு முட்களை அகற்றிவிட்டு மெல்ல அந்த இடத்தைக் கடந்தான். ஆனால் மூன்றாம் மாணவன் பொறுமையாக அந்த முட்கள் அனைத்தையும் பொறுக்கி ஓரமாகப் போட்டுவிட்டு நடந்தான். அவர்களின் பின்னாலேயே வந்து, நடந்தவை அனைத்தையும் கவனித்த குரு, நற்சிந்தனை கொண்ட மூன்றாம் மாணவனிடம், கல்வியின் முக்கிய குறிக்கோளே மற்றவர்களின் துன்பத்தைத் துடைக்க வழி காண்பதுதான். அந்தக் குறிக்கோளை உணர்ந்த நீ இனிமேல் படிக்க வேண்டியது எதுவுமில்லை! எனக் கூறி, அவனை மட்டும் அனுப்பிவிட்டு மற்ற இருவரையும், நீங்கள் கற்க வேண்டியது இன்னும் இருக்கிறது என்று கூறி, திரும்ப அழைத்துச் சென்றார்.
|
|
|
|