|
உண்மை மட்டுமே பேசுபவர்களின் வீட்டில் சாப்பிடவதை வழக்கமாக கொண்டிருந்தார் ஒரு துறவி. ஒரு ஊருக்குச் சென்று, அங்கே உண்மையாளர் யார் என விசாரித்தார். அவர்கள், ஒரு பெரியவரின் வீட்டைக் காட்டினார்கள். அங்கே சென்றதும் பெரியவர் ஓடிவந்து துறவியின் காலில் விழுந்தார். தங்கள் வீட்டில் சாப்பிடும்படி கேட்டுக்கொண்டார். அவர் உண்மை பேசுபவர் தானா என்பதைத தெரிந்து கொள்ள துறவி ஒரு தேர்வு வைத்தார். ""பெரியவரே! தங்கள் வயது என்ன? என்றார். ""மூன்று வயது, ஐந்துமாதம், ஏழுநாள், பதினாறரை மணி என பெரியவர் பதிலளிக்கவே, துறவிக்கு கோபம் வந்துவிட்டது. 60 வயது மதிக்கத்தக்க இவர், இப்படி ஒரு மெகாபொய்யை <<உதிர்க்கிறாரே! இவரைப் போயா இவ்வூர் மக்கள் உண்மையாளர் என்றனர்! என நினைத்தவாறே கோபத்தை அடக்கிக் கொண்டு, ""உம் சொத்து எவ்வளவு? என்றார். ""24 ஆயிரம் என பெரியவர் பதிலளிக்கவே,""ஊர்மக்களிடம் நான் விசாரித்தபோது, இவரை லட்சாதிபதி என்றனர். இவரோ, குறைத்துக்காட்டுகிறாரே என எண்ணியவாறாய் அடுத்ததைக் கேட்டார். ""உமக்கு எத்தனை பிள்ளைகள்? ""ஒரே மகன் என்றதும், ""ஆகா! உன்னை விட கொடிய பொய்யன் பூமியிலேயே இல்லை. நான் மக்களிடம் கேட்டபோது, உமக்கு நான்கு மகன்கள் இருப்பதாகச் சொன்னார்கள். நீயோ, இப்படி பொய் பேசுகிறாயே! உன் வீட்டில் கால் வைத்ததே பாவம், என்றவராய் எழுந்தார். பெரியவர் அவரை அமைதிப் படுத்தினார். ""சுவாமி! நான் உண்மையைத் தான் சொன்னேன், நீங்களே பாருங்கள், என்றவர் கணக்கு நோட்டை எடுத்து வந்தார். ""சுவாமி! இதில் லட்சத்துக்கு மேல் சொத்துக்கணக்கு இருப்பது வாஸ்தவம் தான். ஆனால், நான் இதுவரை செய்த தர்மம் 25 ஆயிரம் தான். எவ்வளவு தர்மம் செய்கிறோமோ, அந்தப்பணம் மட்டுமே, இறைவன் சந்நிதியில் சொத்தாக எடுத்துக்கொள்ளப் படும் என்பதை தாங்கள் அறியாததா! என்றார். துறவி அவரது பதில் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார். அடுத்து தன் மகன்களை பெயர் சொல்லி அழைத்தார். முதல் மூவரும், ""போய்யா! வேலையை பாத்துட்டு, நாங்க மூணுபேரும் சுவாரஸ்யமா பகடை விளையாடி கிட்டு இருக்கோம்! நீ வேறே! உசிரை வாங்காதே! கிழமே! சீக்கிரம் செத்து தொலை! சொத்தையாவது அனுபவிக் கிறோம்! என்று ஆளுக் கொன்றாகச் சொன்னார்கள். கடைசி மகனை அழைத்தார். அவன் ஓடிவந்து நின்றான். ""அப்பா! அழைத்தீர்களே! இந்த மகான் யார்? இருவரும் உணவருந்த ஏற்பாடு செய்யட்டுமா? என்று கைகட்டி பணிவோடு கேட்டான். ""ஐயனே! பார்த்தீர்களா! மற்ற மூவரும் என் முன்ஜென்ம பாவக்கணக்கை தீர்க்க வந்தவர்கள். இவன் மட்டுமே என் சொல் கேட்பவன். எந்த பிள்ளை தந்தைக்கு உதவுகிறதோ, அதுவே நிஜமான பிள்ளை. அதனால் தான் எனக்கு ஒரே மகன் என்றேன், என விளக்கமளித்தார். துறவியின் கண்கள் வியப்பால் விரிந்தன. ""எனது வயது குறித்த கேள்விக்கும் பதிலளித்து விடுகிறேன். எனது உடலுக்கு தான் வயது 60. இது தினமும் ஒன்றரை மணி நேரமே இறைவனைக் குறித்து பிரார்த்தனையில் ஈடுபட்டது. கூட்டிப்பெருக்கிப் பாருங்கள். நான் சொன்ன வயது சரியாக இருக்கும். ஒருவன் பிறந்து எவ்வளவு நாள் வாழ்கிறான் என்று பார்ப்பதில் புண்ணியமில்லை. இறைசிந்தனையில் எவ்வளவு நேரம் இருந்தானோ, அதுதான் உண்மையான வாழ்நாள், என்றார். துறவி அவரை வாழ்த்தினார். மகிழ்ச்சியுடன் உணவருந்தி கிளம்பினார். |
|
|
|