|
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டின் முதல் நாள் அதிகாலையில் பகவான் சங்கநாதம் இசைப்பார். தேவர்களும், பக்தர்களும் திரளாகக் கூடியிருப்பார்கள். பகவான் அப்படி நாதம் எழுப்பினால் தான் நாட்டில் அந்த ஆண்டு நல்ல மழை பொழியும். பக்தர்கள் எல்லாம் முதலில் அந்த நாதத்தில் நனைவார்கள். பின்னர் மழையில் நனைவார்கள். ஒருமுறை புத்தாண்டு அன்று பகவான் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். என்ன அது? சங்கினைக் கையில் எடுத்தவர், அதை மீண்டும் பேழைக்குள்ளேயே வைத்தார். நான் இன்றைக்கு சங்க நாதம் இசைக்க மாட்டேன். என்று அறிவித்தார். பார்வையாளர்கள் பதறிப்போனார்கள். பகவான் நாதம் இசைக்காவிட்டால் என்ன ஆகும்? அந்த ஆண்டு முழுக்க மழையே பொழியாது. பயிர்களும், பசுக்களும், ஏன் மக்களும் வதங்கிப் போவார்கள். வாடிப் போவார்கள். பகவான் அத்துடன் விடவில்லை. மேலும் சொன்னார். இந்தப் புத்தாண்டு மட்டுமல்ல, இன்னும் 14 வருடங்களுக்கு நான் சங்கநாதம் புரிய மாட்டேன். என்று சொல்லிவிட்டு, போயேபோய்விட்டார்.
தேவர்களும், பக்தர்களும் தவித்தார்கள். அது என்ன 14 வருஷம்? பகவான் ஏன் இப்படி சோதிக்கிறார்? ராமபிரானாக தான் கானகத்தில் 14 ஆண்டுகள் இருந்தது நினைவுக்கு வந்து இந்த முடிவை எடுத்தாரா? என்னதான் காரணம்? புரியாமல் அலைந்தார்கள். 14 ஆண்டுகள் மழை இல்லையென்றால் இந்த பூமி என்ன ஆகும்? விவசாயிகளின் கதி என்ன? கடவுளே! கதறிக் கலைந்தார்கள். நாட்கள் நகர்ந்தன. விவசாயிகள் யாரும் வயலுக்குப் போகவில்லை. சும்மா இருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவன் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல், தன்னுடைய வயலை உழுது கொண்டிருந்தான். விவசாயிகளுக்கோ சிரிப்பு தாங்கவில்லை. ஏய் முட்டாளே, உனக்கு விஷயம் தெரியாதா? நாட்டில் 14 ஆண்டுகளுக்கு மழையே பொழியாது. தண்ணீரே இல்லாமல் ஆகப் போகிறது. நீ சும்மா உழுதால் என்ன பயன்? என்று நக்கலடித்தார்கள்.
அந்த விவசாயி அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான். எல்லாம் சரிதானப்பா, அதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மழை பெய்யுமல்லவா? அது வரை சும்மா இருந்தால் விவசாயம் செய்வதே எப்படி என்பது எனக்கு மறந்து போய் விட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். என்று பதில் சொன்னான். நடந்த அத்தனையையும் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தார் பகவான். அந்த உழைப்பாளி கூறியது அவர் மனசுக்குள் ஓடியது. தனக்கும் சங்கநாதம் செய்வது எப்படி என்பது மறந்து போய்விட்டால் என்ன செய்வது? என்று ஒரு விநாடி யோசித்தார். உடனே சங்கை எடுத்து ஊதினார்! அப்புறம் என்ன? மழை பொழிய ஆரம்பித்தது. வயலை உழுத விவசாயி மட்டுமே பெரும் பலன் கண்டான். கடவுள் நம்பிக்கையோடு நீங்கள் உங்கள் செயலைத் தொடர்ந்து செய்தால், எப்போதும், உங்களுக்கு வெற்றிதான். |
|
|
|